சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளை தேர்வு செய்யும் முறையில் திருப்தி இல்லை - மத்திய சட்ட மந்திரி
|சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளாக தகுதியானவர்களை நியமிக்க வேண்டும் என்றும், தற்போது தேர்வு செய்யும் முறையில் திருப்தி இல்லை என்றும் மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூ கூறியுள்ளார்.
திருப்தி இல்லை
மும்பையில் 'நீதித்துறை சீர்திருத்தம்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. இதில் கலந்து கொண்ட மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ பேசியதாவது:-
நான் நீதித்துறை அல்லது நீதிபதிகளை விமர்சிக்கவில்லை. ஆனால் தற்போது உள்ள சுப்ரீம் கோர்ட்டு கொலிஜியம் அமைப்பில் (சிஸ்டம்) எனக்கு திருப்தி இல்லை. எந்த சிஸ்டமும் சரியாக இல்லை. நாம் எப்போதும் சிறந்த அமைப்பை உருவாக்க உழைத்து வருகிறோம். அந்த அமைப்புகள் பொறுப்பு மற்றும் வெளிப்படை தன்மையுடன் இருக்க வேண்டும். பொதுமக்கள், வக்கீல்கள் மற்றும் சில நீதிபதிகள் யோசிப்பதை தான் நான் கூறுகிறேன்.
தற்போது உள்ள கொலிஜியம் முறையில் உள்ள அடிப்படை தவறு, நீதிபதிகள் அவர்களுக்கு தெரிந்தவர்களை பரிந்துரை செய்வது தான். கண்டிப்பாக அவர்கள் தெரியாத நீதிபதிகளை பரிந்துரை செய்வதில்லை. தகுதியானவர்கள் தான் நீதிபதியாக நியமிக்கப்பட வேண்டும். கொலிஜியத்துக்கு தெரிந்தவர்கள் அல்ல.
இவ்வாறு அவர் பேசினார்.
கொலிஜியம் முறை
இந்திய நீதித்துறையில் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகளை தேர்ந்தெடுப்பதற்காக கொலிஜியம் முறை பின்பற்றப்படுகிறது. கொலிஜியம் என்பது சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தலைமையில் மூத்த நீதிபதிகள் 4 பேர் கொண்ட குழுவாகும். இந்த குழு சுப்ரீம் கோட்டிற்கு புதிய நீதிபதிகளை தேர்ந்தெடுப்பது, நீதிபதிகளை இடமாற்றம் செய்வது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கொலிஜியம் அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் மத்திய சட்ட அமைச்சகம் நீதிபதிகள் நியமன அறிவிப்பை வெளியிட்டு அதற்கான ஒப்புதலை ஜனாதிபதி அளிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.