மீனவர் நலன் காக்கப்படும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஜெய்சங்கர் கடிதம்
|தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கடிதம் எழுதியுள்ளார்.
புதுடெல்லி,
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க தூதரகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக அந்த கடிதத்தில், "மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக நீங்கள் எழுதிய கடிதம் வந்தது. 34 இந்திய மீனவர்கள் இலங்கையில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். ஆறு பேர் தண்டனை பெற்று தண்டனை சிறைவாசம் அனுபவித்து வருகிறார்கள்.
கொழும்புவில் உள்ள இந்திய தூதரகம், யாழ்பாணத்தில் உள்ள துணைத் தூதரக அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு, கைது செய்யப்பட்டவர்களை முன்கூட்டியே விடுவிக்க உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மீனவர் பிரச்சனை 1974ம் ஆண்டு ஆரம்பித்தது என்பதை நீங்கள் அறிவீர்கள்.
2014ம் ஆண்டு பா.ஜனதா ஆட்சிக்கு வந்த பிறகு மீனவர் சமூகத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கடந்த 10 ஆண்டுகளாக நடவடிக்கை எடுத்து வருகிறது. கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இந்திய மீனவர்களின் நலன் மற்றும் பாதுகாப்புக்கு நாங்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம். எப்போதும் அவ்வாறு செய்வோம் என்று நீங்கள் உறுதியாக நம்பலாம்" என்று அதில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.