வரலாற்றில் முதல்முறையாக... குடியரசு தின விழா அணிவகுப்பில் ஒன்றாக பங்கேற்கும் ராணுவ தம்பதி
|குடியரசு தின விழாவில் முதல்முறையாக வெவ்வேறு படைப்பிரிவுகளை சேர்ந்த தம்பதி அணிவகுப்பில் ஒன்றாக பங்கேற்க உள்ளனர்.
புது டெல்லி,
நாட்டின் 75வது குடியரசு தினம் வரும் 26ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. குடியரசு தினத்தின்போது டெல்லியில் உள்ள கடமை பாதையில் ராணுவம், கடற்படை, விமானப்படை என முப்படைகளின் அணிவகுப்பும் நடைபெறும். ராணுவத்தின் பல்வேறு படைப்பிரிவிகளை சேர்ந்த வீரர்களும் அந்த அணிவகுப்பில் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில் குடியரசு தின விழாவில் முதல்முறையாக வெவ்வேறு படைப்பிரிவுகளை சேர்ந்த தம்பதி அணிவகுப்பில் ஒன்றாக பங்கேற்க உள்ளனர். நீலகிரி மாவட்டம் வெல்லிங்டனை சேர்ந்தவர் மேஜர் பிளேஸ். இவருக்கும் கர்நாடக மாநிலம் மைசூருவை சேர்ந்த கேப்டன் சுப்ரீதாவுக்கும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் ஆனது. இருவரும் தற்போது டெல்லியில் வசித்து வருகின்றனர்.
கேப்டன் சுப்ரீதா ராணுவ போலீஸ் படையிலும், மேஜர் பிளேஸ் மெட்ராஸ் ரெஜிமென்டிலும் பணியாற்றி வருகின்றனர். வெவ்வேறு படைப்பிரிவுகளை சேர்ந்த இருவரும் தற்போது குடியரசு தின விழா அணிவகுப்பில் ஒன்றாக பங்கேற்க உள்ளனர்.
இதுகுறித்து பேசிய கேப்டன் சுப்ரீதா, 'இது திட்டமிட்டு நடக்கவில்லை. இது ஒரு தற்செயல் நிகழ்வு. ஆரம்பத்தில் தேர்வில் பங்கேற்று நான் தேர்வானேன். பின்னர் எனது கணவரும் அவரது படைப்பிரிவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். எனது கணவர் மெட்ராஸ் ரெஜிமென்ட்டைச் சேர்ந்தவர், நான் ராணுவ போலீஸ் படையின் ஒரு பகுதியாக இருக்கிறேன்.
நாங்கள் வெவ்வேறு இடங்களில் பணியமர்த்தப்பட்டு உள்ளோம், புது டெல்லியில் இந்த இரண்டு மாதங்களுக்கு இருவரும் ஒன்றாக நேரத்தை செலவிட இது ஒரு வாய்ப்பு. எங்கள் இருவருக்குமே நாங்கள் அந்தந்த அணிகளுடன் இங்கு இருப்பது மிகவும் பெருமையான தருணம்' என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய மேஜர் பிளேஸ், '2016 ஆம் ஆண்டு என்சிசி குடியரசு தின விழாவில் எனது மனைவி புதுடெல்லி கடமை பாதை அணிவகுப்பில் பங்கேற்றார். மேலும் நான் 2014 ஆம் ஆண்டு புது டெல்லியில் நடைபெற்ற என்சிசி குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றேன். 2024 ஆம் ஆண்டு குடியரசு தினத்தில் கடமை பாதையில் எனது படைப்பிரிவை வழிநடத்தி எனது படைப்பிரிவை பெருமைப்படுத்துவதற்கு இதுவும் ஊக்கமளிக்கும் விதமாக உள்ளது.' என்றார்.