மதவாதிகளுக்கு எதிராக போராட்டம் முதல்-மந்திரி சித்தராமையா ஆவேசம்
|மதவாதிகளுக்கு எதிராக போராட்டம் நடத்தி வந்துள்ளேன், என்னுடைய உடல் கூட பா.ஜனதாவுக்கு செல்லாது என முதல்-மந்திரி சித்தராமையா கூறினார்.
மைசூரு
முதல்-மந்திரி சித்தராமையா
கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் மைசூரு சென்றார். பின்னர் விமான நிலையத்தில் முதல்-மந்திரி சித்தராமையா நிருபர்களிடம் பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
பெங்களூருவில் தனியார் வாகனங்களின் உரிமையாளர்கள், டிரைவர்கள் இன்று (நேற்று) வேலை நிறுத்தம் போராட்டம் நடத்தினர். இதுதொடர்பாக அவர்களிடம் பேசி கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.
கர்நாடகத்தில் பெண்கள் பயன்படும் வகையில் அரசு பஸ்களில் இலவச பயண திட்டத்தை கொண்டு வரப்பட்டுள்ளது. தனியார் வாகனங்களுக்கு பெண்கள் ஏற வர மாட்டார்கள். இதனால் நஷ்டம் ஏற்படுகிறது என தனியார் வாகன உரிைமயாளர்கள் கூறி வருகிறார்கள்.
கோரிக்கை தீர்த்து வைக்கப்படும்
ஜனநாயக நாட்டில் எல்லோருக்கும் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தும் உரிமை உள்ளது. அதனை தடுக்க யாராலும் முடியாது, தனியார் வாகன உரிமையாளர்கள் அமைதியான நிலையில் போராட்டம் நடத்தட்டும்.
நியாயமான கோரிக்கைகளை கொண்டு வந்தால் தீர்த்து வைக்கப்படும்.
ஜனதா தளம் (எஸ்) கட்சியில் இருந்து நான் (சித்தராமையா) விலகி சென்றபோது பா.ஜனதாவில் சேருவதற்கு எல்.கே. அத்வானியை சந்தித்தார் என குமாரசாமி கூறி வருகிறார். எனது உடல் கூட பா.ஜனதாவுக்கு செல்லாது.
என்னுடைய அரசியல் வாழ்க்கை முழுவதும் மதவாத சக்திகளுக்கு எதிராகவே இருந்து வந்திருக்கிறேன். அதற்காக பல போராட்டங்களை நடத்தி வருகிறேன். அப்படி இருக்கும்பொது நான் மத வன்முறை தூண்டிவிடும் பா.ஜனதா கட்சி பக்கம் போவேனா? நான் பா.ஜ.க.வில் சேருகிறேன் என்று சொன்னால் யாராவது நம்புவார்களா?.
உள்துறை மந்திரி அமித்ஷா
ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் சொந்த விஷயமாக யாரையாவது சந்திக்க டெல்லிக்கு நான் சென்றேன். அங்கு எதிர்க்கட்சியை சேர்ந்தவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளேன். அதற்கெல்லாம் அந்த கட்சி சேருவார்கள் என்று கூறலாமா?.
சமீபத்தில் டெல்லிக்கு சென்று உள்துறை மந்திரி அமித்ஷா சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருந்தேன். அதற்காக பா.ஜ.க.வில் நான் சேருகிறேன் என்று அர்த்தமா?
இதற்கு முன்பு பா.ஜனதா மூத்த தலைவர் எல்.கே. அத்வானியை நான் சந்தித்து உடல் நலம் விசாரித்தேன். இதற்கு எல்லாம் பா.ஜனதாவில் நான் சேருகிறேன் என்றால் எனக்கு நகைச்சுவையாக இருக்கிறது. இவ்வாறு முதல்-மந்திரி சித்தராமையா கூறினார்