காங்கிரஸ் ஆட்சியமைத்த பின் முதல் சட்டசபை கூட்டத்தொடர்; பா.ஜ.க. தலைவர்களை சந்தித்து பேசிய டி.கே. சிவக்குமார்
|கர்நாடக சட்டசபை கூட்டத்தொடருக்கு வருகை தந்த துணை முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார், பா.ஜ.க. தலைவர்களை இன்று சந்தித்து பேசினார்.
பெங்களூரு,
கர்நாடகாவில் சமீபத்திய சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று நீண்ட இழுபறிக்கு பின்னர் ஆட்சியமைத்தது.
முதல்-மந்திரியாக சித்தராமையா மற்றும் துணை முதல்-மந்திரியாக டி.கே. சிவக்குமார் ஆகியோர் கவர்னர் தாவர்சந்த் கெலாட் முன்னிலையில் முறைப்படி பதவியேற்று கொண்டனர். புதிய மந்திரி சபையில் 8 எம்.எல்.ஏ.க்கள் மந்திரிகளாக பதவியேற்று கொண்டனர்.
அவர்களில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் மகன் பிரியங் கார்கே, கட்சியின் எம்.எல்.ஏ.க்களான ஜி. பரமேஷ்வரா மற்றும் எம்.பி. பாட்டீல் உள்ளிட்டோர் முக்கியம் வாய்ந்தவர்கள் ஆவர்.
இவர்கள் தவிர, பிற எம்.எல்.ஏ.க்களான முனியப்பா, ஜார்ஜ், சதீஷ் ஜார்கிகோளி, ராமலிங்க ரெட்டி மற்றும் ஜமீர் அகமது கான் உள்ளிட்டோரும் கடந்த 20-ந்தேதி முறைப்படி மந்திரிகளாக பொறுப்பேற்று கொண்டனர்.
இதனை தொடர்ந்து, கர்நாடக சட்டசபை கூட்டத்தொடர் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு, கட்சி எம்.எல்.ஏ.க்கள் அவைக்கு வர தொடங்கினர்.
இதில், கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார், பா.ஜ.க. தலைவர்களை இன்று சந்தித்து பேசினார். இதன்படி, கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை சந்தித்து டி.கே. சிவக்குமார் பேசினார்.
அதற்கு முன்பு, பா.ஜ.க.வின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் மத்திய மந்திரியான, தனது உறவினர் எஸ்.எம். கிருஷ்ணாவை பெங்களூரு நகரில் வைத்து டி.கே. சிவக்குமார் சந்தித்து பேசினார்.
டி.கே. சிவக்குமார் தனது மகளை, எஸ்.எம். கிருஷ்ணாவின் பேரனுக்கு கடந்த 2021-ம் ஆண்டு திருமணம் செய்து வைத்து உள்ளார். இந்த நிலையில், கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியமைத்த பின்னர், சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் இன்று நடைபெறுகிறது.
இதில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் பதவி பிரமாணம் செய்து வைக்கப்படுவார்கள். புதிய சபாநாயகரும் தேர்ந்தெடுக்கப்படுவார்.
மூத்த காங்கிரஸ் தலைவர் ஆர்.வி. தேஷ்பாண்டே, இடைக்கால சபாநாயகராக இருந்து அவையை வழிநடத்தி செல்வார். இந்த கூட்டத்தொடர் வருகிற 24-ந்தேதி வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது.