மணிப்பூரில் மீண்டும் துப்பாக்கிச்சூடு:2 பேர் பலி
|குகி ஆதிக்கம் செலுத்தும் சுராசந்த்பூர் மற்றும் மைதேயி அதிகம் உள்ள பிஷ்னுபூர் மாவட்ட எல்லை பகுதியில் துப்பாக்கிச்சூடு நடந்தது.
மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த மே மாதம் ஏற்பட்ட கலவரத்தில் 160க்கும் மேற்பட்டோர் பலியாகினர். வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் வெளியேறினர். அரசின் தீவிர நடவடிக்கைகளுக்கு பிறகு படிப்படியாக அமைதி திரும்பிவருகிறது.
இந்த நிலையில் மணிப்பூரில் மீண்டும் துப்பாக்கிச்சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது. குகி ஆதிக்கம் செலுத்தும் சுராசந்த்பூர் மற்றும் மைதேயி அதிகம் உள்ள பிஷ்னுபூர் மாவட்ட எல்லை பகுதியில் துப்பாக்கிச்சூடு நடந்தது. நரஜ்சேனாவை ஒட்டிய கிராமங்களில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலியானதாக காவல்துறை தெரிவித்துள்ளது. 7 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறந்தவரில் ஒருவர் ஜங்மின் லுன் காங்டே (வயது 30). இவர் கிராம பாதுகாப்பு தன்னார்வலர் ஆவார். மற்றொருவர் 40 வயதான விவசாயி சலாம் ஜோதின்.
மோதல் நடந்த பகுதிகளில் மாவட்ட போலீசார், அசாம் ரைபிள்ஸ் படையினர், ராணுவம் மற்றும் மத்தியப் படைகள் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.