< Back
தேசிய செய்திகள்
ஜார்க்கண்ட் போராட்டத்தில் துப்பாக்கி சூடு; கான்ஸ்டபிள் உள்பட 5 பேர் காயம்
தேசிய செய்திகள்

ஜார்க்கண்ட் போராட்டத்தில் துப்பாக்கி சூடு; கான்ஸ்டபிள் உள்பட 5 பேர் காயம்

தினத்தந்தி
|
11 Jun 2022 3:41 PM IST

ஜார்க்கண்டில் ராஞ்சி நகரில் நடந்த போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கி சூட்டில் கான்ஸ்டபிள் உள்பட 5 பேர் காயமடைந்து உள்ளனர்.



ராஞ்சி,


ஜார்க்கண்டில் ராஞ்சி நகரில் நடந்த போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கி சூட்டில் கான்ஸ்டபிள் உள்பட 5 பேர் காயமடைந்து உள்ளனர்.

ஞானவாபி மதவழிபாட்டு தலம் தொடர்பாக ஆங்கில செய்தி சேனலில் கடந்த 27ந்தேதி நடந்த விவாதத்தில் பா.ஜ.க. செய்தித்தொடர்பாளர் நுபுர் சர்மா பங்கேற்றார்.

இந்த நிகழ்ச்சியின் போது இந்து மத கடவுள் சிவலிங்கம் குறித்து விவாதத்தில் பங்கேற்ற நபர் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார் என குற்றச்சாட்டு எழுந்தது. அதனை தொடர்ந்து பேசிய நுபுர் சர்மா, இஸ்லாமிய மத கடவுளின் இறை தூதர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்த விவகாரத்தில் நுபுர் சர்மாவை கட்சியில் இருந்து பா.ஜ.க. இடைநீக்கம் செய்து உத்தரவிட்டது. இந்த விவகாரத்தில் பா.ஜ.க.வை சேர்ந்த நவீன் ஜீண்டாலையும் அக்கட்சி நீக்கியது. இதற்கிடையில், மத கடவுளின் இறை தூதரை அவமதித்ததாக கூறியும் பா.ஜ.க. முன்னாள் செய்தித்தொடர்பாளர் நுபுர் சர்மாவை கைது செய்ய கோரியும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமிய மதத்தினர் நேற்று மதியம் மத வழிபாட்டிற்கு பின் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டங்கள் பல்வேறு பகுதிகளில் வன்முறையில் முடிந்தது. வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் குவிக்கப்பட்டனர். ஒருசில பகுதிகளில் வன்முறையாளர்கள் சாலைகளை மறித்தும், வாகனங்களுக்கு தீ வைத்து கொளுத்தியும் வன்முறையில் ஈடுபட்டனர்.

வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர். அப்போது, வன்முறையாளர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். போலீசார் தரப்பிலும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

ராஞ்சி நகரில் நடந்த போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கி சூட்டில் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உள்பட 5 பேர் காயமடைந்து உள்ளனர். அவர்கள் சம்பவம் நடந்த பகுதியில் இருந்து மீட்கப்பட்டு ரிம்ஸ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். தொடர்ந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்