< Back
தேசிய செய்திகள்
பட்டாசு கடை தீ விபத்து; உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு கர்நாடக அரசு இழப்பீடு அறிவிப்பு
தேசிய செய்திகள்

பட்டாசு கடை தீ விபத்து; உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு கர்நாடக அரசு இழப்பீடு அறிவிப்பு

தினத்தந்தி
|
8 Oct 2023 3:39 AM IST

கர்நாடகாவில் பட்டாசு கடை தீ விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்து உள்ளது.

பெங்களூரு,

கர்நாடகா மற்றும் தமிழக எல்லைப்பகுதியான அத்திப்பள்ளி வளைவு அருகே பட்டாசு கடை மற்றும் குடோன் ஒன்று உள்ளது. இதனை ஓசூர் பேடரப்பள்ளி பகுதியை சேர்ந்த நவீன் என்பவர் நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் நேற்று மாலை 3.15 மணியளவில் கடையில் திடீரென தீ பிடித்து, மளமள என்று நாலாபுறமும் பரவியது. இதனை கண்டு கடை உரிமையாளர் நவீன் மற்றும் கடையில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இந்த தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல் வெளியானது. இந்நிலையில், பட்டாசு கடை வெடிவிபத்தில் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்து உள்ளது. இவர்களில் 10 பேர் தமிழ்நாட்டின் மதுரையை சேர்ந்தவர்கள். கடைக்குள் சிலர் சிக்கியிருக்க கூடும் என கூறப்படுகிறது. அவர்களை மீட்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

இந்த தீ விபத்தில் பட்டாசு கடை முன்பு நிறுத்தப்பட்டிருந்த 7 இரு சக்கர வாகனங்கள், 2 பிக்கப் வேன்கள் மற்றும் 1 சரக்கு மினி லாரி ஆகியவை தீயில் கருகின. பட்டாசுக்கடையின் பக்கத்தில் உள்ள 2 மதுபான கடைகள், டீ கடையும் சேதம் அடைந்தன.

இந்த சம்பவத்திற்கு கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா இரங்கல் தெரிவித்து உள்ளார். தீ விபத்து ஏற்பட்ட பகுதிக்கு சென்று ஆய்வு செய்ய உள்ளேன் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

இந்நிலையில், தீ விபத்து நடந்த பகுதிக்கு கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார், நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது அவர், அதிகாரிகளை சந்தித்து விவரங்களை கேட்டறிந்து உள்ளார். பட்டாசு தீ விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு கர்நாடக அரசு இழப்பீடு வழங்கும் என அறிவித்து உள்ளார். இதன்படி, பட்டாசு தீ விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்