< Back
தேசிய செய்திகள்
ஒவ்வொரு தேர்தலின்போதும் அக்னிபரீட்சை தரப்படுகிறது: தலைமை தேர்தல் ஆணையாளர்
தேசிய செய்திகள்

ஒவ்வொரு தேர்தலின்போதும் அக்னிபரீட்சை தரப்படுகிறது: தலைமை தேர்தல் ஆணையாளர்

தினத்தந்தி
|
12 March 2023 3:49 PM IST

ஒவ்வொரு தேர்தலின்போதும் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அக்னிபரீட்சை தந்து கொண்டிருக்கிறது என தலைமை தேர்தல் ஆணையாளர் கூறியுள்ளார்.



பெங்களூரு,


கர்நாடகாவில் நடப்பு ஆண்டில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. கர்நாடக சட்டசபைக்கான பதவி காலம் நடப்பு ஆண்டின் மே 24-ந்தேதி வரை உள்ளது. இந்த நிலையில், ஆளும் பா.ஜ.க., எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் பொது கூட்டம், பேரணி என தீவிர பிரசார பணிகளில் ஈடுபட்டு உள்ளன. வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டு வருகின்றன.

இதனை முன்னிட்டு, கர்நாடகாவில் இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைவர் ராஜீவ் குமார் தனது குழுவினருடன் சேர்ந்து 3 நாட்கள் தங்கி சட்டசபை தேர்தல் பணிக்கு தயாராவது பற்றி ஆய்வு பணி மேற்கொண்டு வருகிறார்.

இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இதுவரை 400 சட்டசபை தேர்தல்கள், 17 நாடாளுமன்ற தேர்தல்கள் மற்றும் 16 ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி தேர்தல்களை நடத்தி முடித்து உள்ளது.

இந்த நிலையில், இந்திய தலைமை தேர்தல் ஆணையாளர் ராஜீவ் குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார். அவரிடம் கர்நாடகாவில் நடைபெற உள்ள தேர்தலில், வெளிப்படையான மற்றும் சுதந்திரமுடன் தேர்தல் நடைபெறும் என்று மாநில மக்கள் நம்பிக்கை கொள்ள முடியுமா? என்று கேள்வி ஒன்று எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் அளித்து அவர் கூறும்போது, திரிபுரா, மேகாலயா மற்றும் நாகாலாந்து ஆகிய 3 வடகிழக்கு மாநிலங்களில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தல்கள் உள்பட 400 சட்டசபை தேர்தல்களுக்கான மைல் கல்லை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நிறைவு செய்து உள்ளது என குறிப்பிட்டார்.

ஒவ்வொரு தேர்தலிலும் முடிவுகள் ஏற்று கொள்ளப்பட்டு உள்ளன. ஒவ்வொரு முறையும் வாக்களிப்பதன் வழியே, அதிகார பரிமாற்றம் சுமுக முறையில் நடந்து வருகிறது என்று அவர் கூறியுள்ளார்.

ஒவ்வொரு தேர்தல் நடந்து முடிந்த பின்னரும், இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ஒவ்வொரு முறையும் இன்னும் அக்னிபரீட்சை தந்து கொண்டிருக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்