கான்பூரில் மெத்தை தயாரிப்பு தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து: 6 பேர் உயிரிழப்பு
|தீ விபத்து தொடர்பாக தொழிற்சாலை உரிமையாளர் மற்றும் அவரது இரண்டு மகன்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கான்பூர்:
உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள தொழிற்பேட்டையில் மெத்தை தயாரிப்பு தொழிற்சாலை உள்ளது. இங்கு நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அப்போது எரிவாயு சிலிண்டர் வெடித்ததால் தொழிற்சாலையின் கூரை இடிந்து விழுந்தது. இதனால் உள்ளே வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளர்கள் வெளியேற முடியாமல் நெருப்பில் சிக்கிக்கொண்டனர்.
இதுபற்றி தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தினர். பின்னர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் 6 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 5 பேர் காயமடைந்தனர். மேலும் விபத்து நடந்தபோது அங்கு வேலை செய்துகொண்டிருந்த 3 பேரை காணவில்லை எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
விபத்து தொடர்பாக தொழிற்சாலை உரிமையாளர் மற்றும் அவரது இரண்டு மகன்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருப்பதாக காவல்துறை அதிகாரி கூறி உள்ளார்.