< Back
தேசிய செய்திகள்
மின்சார ஸ்கூட்டர் ஷோரூமில் தீவிபத்து; பல லட்சம் ரூபாய் மதிப்பிலான வாகனங்கள் எரிந்து நாசம்
தேசிய செய்திகள்

மின்சார ஸ்கூட்டர் ஷோரூமில் தீவிபத்து; பல லட்சம் ரூபாய் மதிப்பிலான வாகனங்கள் எரிந்து நாசம்

தினத்தந்தி
|
24 Jun 2022 9:09 PM IST

மங்களூருவில் மின்சார ஸ்கூட்டர் ஷோரூமில் தீவிபத்து ஏற்பட்டது. இதனால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான ஸ்கூட்டர்கள் எரிந்து நாசமாகின.

மங்களூரு;

மின்சார ஸ்கூட்டர் ஷோரூம்

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களுரு டவுன் நாகுரி பகுதியில் மின்சார ஸ்கூட்டர் ஷோரூம் உள்ளது. இந்த மின்சார ஸ்கூட்டர் ஷோரூம் சமீபத்தில் தான் தொடங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலை வழக்கம்போல் ஷோரூமில் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

தீவிபத்து

இந்த சந்தர்ப்பத்தில் திடீரென ஷோரூமின் ஒரு பகுதியில் தீப்பிடித்தது. இந்த தீ மளமளவென அனைத்து இடங்களிலும் பரவி கொழுந்துவிட்டு எரியதொடங்கியது. இதனால் மின்சார ஸ்கூட்டர்களும் தீயில் எரிந்து கொண்டிருந்தன.

இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், வாளிகளில் தண்ணீரை பிடித்து வந்து ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அவர்களால் தீயை அணைக்க முடியவில்லை. இதுபற்றி தீயணைப்பு படைவீரர்களுக்கும், மங்களூரு போலீசாருக்கு உடனடியாக தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

பல லட்சம் ரூபாய் மதிப்பு

பின்னர் தீயணைப்பு படைவீரர்கள் ஷோரூமில் பிடித்து எரிந்த தீயை, தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைக்க முயன்றனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீயை முற்றிலுமாக அணைத்தனர். ஆனாலும் ஷோரூமில் இருந்த மின்சார ஸ்கூட்டர்கள் தீயில் எரிந்து நாசமானது.

இவற்றின் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும். விசாரணையில் மின்கசிவு ஏற்பட்டதால் ஷோரூமில் தீப்பிடித்தது தெரியவந்தது. இந்த தீவிபத்து குறித்து மங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்