ஆந்திராவில் தனியார் கல்வி நிறுவனத்தில் தீ விபத்து
|தீ விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாகப்பட்டினம்,
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் காஜுவாக்காவில் தனியார் கல்வி நிறுவனம் உள்ளது. அந்த கல்வி நிறுவனத்தில் திடீரென இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ அதே கட்டிடத்தில் உள்ள உணவகம் மற்றும் நகைக்கடைகள் அமைந்துள்ள கட்டிடங்கள் இருக்கும் இடங்களிலும் பரவியது. இந்த தீ விபத்து குறித்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு 2 தீயணைப்பு வாகனங்களுடன் வந்த தீயணைப்பு துறையினர் வெகு நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து ஏற்படும்போது கட்டிடத்தில் யாரும் இல்லாததால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. விபத்துக்கான காரணம் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. மேலும் கல்வி நிறுவனத்தில் மாணவர்களுக்கு இன்னும் 2 நாட்களில் தேர்வு நடைபெற இருந்த நிலையில் இந்த தீ விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.