ஐதராபாத் தனியார் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து
|சுமார் 4 மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.
ஐதராபாத்,
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் குடிமல்காபூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
6வது மாடியில் உள்ள ஸ்டோர் ரூமில் ஏற்பட்ட தீ, மருத்துவமனை முழுவதும் பரவியது. இதனால் பீதியடைந்த மருத்துவமனை ஊழியர்கள், நோயாளிகளை உடனடியாக பாதுகாப்பாக வெளியேற்றினர். மேலும் மருத்துவமனை அமைந்துள்ள 6 மாடி கட்டிடம் முழுவதும் தீ பரவியதால் அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர்.
தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 4 வாகனங்களில் இருந்த தண்ணீரை பயன்படுத்தி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். கட்டடத்தின் 6வது மாடியில், மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள் தங்கும் விடுதி உள்ளது. அங்கு சுமார் 100 செவிலியர்கள் தங்கியிருந்தனர்.
பலர் அலறியடித்தபடி அங்கும் இங்கும் ஓடினர். பின்னர் சுமார் 4 மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். மேலும் அங்கிருந்த நோயாளிகளும் எவ்வித ஆபத்தும் இன்றி வேறு அறைகளுக்கு மாற்றப்பட்டனர். இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதமானதாக தெரிகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் மருத்துவமனையின் மாடியில் இருந்த எல்இடி விளக்குகளில் ஏற்பட்ட மின்கசிவே இந்த தீவிபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளதாக போலீசார் கூறுகின்றனர்.