முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு எதிராக எப்.ஐ.ஆர். பதிவு; சாலையோர கடைக்காரருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
|உத்தர பிரதேசத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு எதிராக எப்.ஐ.ஆர். பதிவு செய்த சாலையோர கடைக்காரருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது.
அலகாபாத்,
உத்தர பிரதேசத்தின் இட்டா மாவட்டத்தில் சாலையோரம் வண்டியில் துணி கடை போட்டிருப்பவர் ரமேஷ்வர் தயாள். சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.வான ரமேஷ்வர் யாதவ் மற்றும் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஒருவர் மீது தயாள் போலீசில் புகார் அளித்துள்ளார். இதன்படி, எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது.
சாதியை குறிப்பிட்டு பேசியதுடன், தயாளின் நிலபுலன்களை கட்டாயப்படுத்தி விற்க செய்வதற்காக அவரை பணய கைதியாக பிடித்து வைத்திருந்த குற்றச்சாட்டிற்காகவும் போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
இதனை தொடர்ந்து, இருவரும் எப்.ஐ.ஆர்.-ஐ தள்ளுபடி செய்யும்படி, ஐகோர்ட்டை நாடியுள்ளனர். இந்த குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில், தயாளுக்கு அலகாபாத் நீதிமன்றம் பாதுகாப்பு வழங்கி உத்தரவிட்டது. இதனால், தயாள் தனது கடையில் இருக்கும்போது, அவருக்கு பாதுகாப்பிற்காக ஏ.கே.-47 ரக துப்பாக்கி ஏந்திய 2 போலீசார் உடன் உள்ளனர். இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை வருகிற 25ந்தேதி நடைபெற உள்ளது.