உத்தரகாண்டில் நகராட்சி ஆணையருக்கு மிரட்டல் விடுத்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு
|பா.ஜ.க. எம்.எல்.ஏ. மகேஷ் ஜீனா மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
டேராடூன்,
உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. மகேஷ் ஜீனா மற்றும் அவரது கூட்டாளிகள் 4 பேர் சேர்ந்து டேராடூன் நகராட்சி ஆணையர் கவுரவ் குமாரை மிரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில் சம்பந்தப்பட்ட பா.ஜ.க. எம்.எல்.ஏ. மகேஷ் ஜீனாவை கண்டித்து மாநகராட்சி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி 15 நாட்களில் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கர்வால் மாநகராட்சி கமிஷனர் வினய் சங்கர் பாண்டேவுக்கு உத்தரகாண்ட் முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து உத்தரகாண்ட் மாநில ஐ.ஏ.எஸ். சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த 5-ந்தேதி டேராடூனில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில், டெண்டர் விவகாரம் தொடர்பாக பா.ஜ.க. எம்.எல்.ஏ. மகேஷ் ஜீனா, அவரது ஆதரவாளர்கள் 4 பேருடன் சேர்ந்து தகராறில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு மாநகராட்சி அலுவலகத்தில் இருந்த கணக்காளர் மற்றும் ஒப்பந்ததாரரிடம் வாக்குவாதம் செய்து மிரட்டியதாகவும், தொடர்ந்து நகராட்சி ஆணையருக்கும் பா.ஜ.க. எம்.எல்.ஏ. மகேஷ் ஜீனா மிரட்டல் விடுத்ததாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இருப்பினும் தன் மீதான குற்றச்சாட்டுக்கு பா.ஜ.க. எம்.எல்.ஏ. மகேஷ் ஜீனா மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக எம்.எல்.ஏ. மகேஷ் ஜீனா மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பா.ஜ.க. எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டதைத் தொடர்ந்து மாநகராட்சி ஊழியர்கள் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.