< Back
தேசிய செய்திகள்
பொருளாதாரத்தில் இந்தியாவை 2-வது இடத்துக்கு கொண்டு வர நடவடிக்கை: வடகிழக்கு மாநிலங்களுக்கு அமித்ஷா அழைப்பு
தேசிய செய்திகள்

பொருளாதாரத்தில் இந்தியாவை 2-வது இடத்துக்கு கொண்டு வர நடவடிக்கை: வடகிழக்கு மாநிலங்களுக்கு அமித்ஷா அழைப்பு

தினத்தந்தி
|
10 Oct 2022 3:59 AM IST

பொருளாதாரத்தில் இந்தியாவை 2-வது இடத்துக்கு கொண்டுவர நிதி ஒழுக்கத்தை பின்பற்றுவது அவசியம் என்று வடகிழக்கு மாநில முதல்-மந்திரிகளுக்கு அமித்ஷா அழைப்பு விடுத்துள்ளார்.

கவுகாத்தி,

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, 3 நாள் பயணமாக கடந்த 7-ந் தேதி அசாம் மாநிலத்துக்கு சென்றார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

கடைசி நாளான நேற்று, அவர் கவுகாத்தியில் வடகிழக்கு கவுன்சிலின் 70-வது மாநாட்டில் கலந்து கொண்டார். அங்கு அவர் பேசியதாவது:-

கிளர்ச்சி, தொடர்பு இன்மை, முந்தைய அரசுகளின் அக்கறையின்மை ஆகியவற்றால் பல பத்தாண்டுகளாக வடகிழக்கு மாநிலங்கள் பின்தங்கி இருந்தன.

மோடி அரசு வந்த பிறகு, இந்த பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு கண்டு, வடகிழக்கு பிராந்தியத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல வழிகள் வகுக்கப்பட்டன. அமைதியை உருவாக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்தியாவை பொருளாதாரத்தில் உலகத்திலேயே 2-வது இடத்துக்கு கொண்டுவர வடகிழக்கு மாநிலங்களின் முதல்-மந்திரிகள் தங்கள் மாநிலங்களில் நிதி ஒழுக்கத்தை கடைபிடிப்பது அவசியம் என்று அவர் பேசினார்.

முன்னதாக, கவுகாத்தியில் நிலாச்சல் மலை உச்சியில் அமைந்துள்ள காமாக்யா கோவிலில் அமித்ஷா சாமி தரிசனம் செய்தார். இந்த கோவில், 51 சக்தி பீடங்களில் ஒன்றாகும்.

கோவில் வாசலில் அமித்ஷாவை மூத்த அர்ச்சகர்களும், கோவில் நிர்வாகிகளும் வரவேற்றனர். முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மாவும் உடன் சென்றார்.

சாமி கும்பிட்ட பிறகு, அமித்ஷா கோவிலை வலம் வந்தார். பக்தர்களுக்கு வணக்கம் தெரிவித்து விட்டு, அங்கிருந்து புறப்பட்டார்.

மேலும் செய்திகள்