கொரோனா பேரிடர் காலத்தில் மறைந்த 35 பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி - மத்திய அரசு ஒப்புதல்
|கொரோனாவால் உயிரிழந்த பத்திரிகையாளர்கள் குடும்பங்களுக்கு பத்திரிகையாளர் நலத்திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படும்.
புதுடெல்லி,
மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை செயலாளர் அபூர்வ சந்திரா தலைமையிலான பத்திரிகையாளர் நலத்திட்டக்குழு, மறைந்த பத்திரிகையாளர்கள் 35 பேரின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்குமாறு அளித்த பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது. மொத்தம் ரூ.1.81 கோடி நிதியுதவி வழங்க இக்குழுவின் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதன்படி பத்திரிகையாளர்கள் நல நிதியிலிருந்து 7 பத்திரிகையாளர்கள் மற்றும் 35 பத்திரிகையாளர்கள் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கப்படும். நிரந்தர உடல்திறன் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட 2 பத்திரிகையாளர்கள், பெரிய நோய்களுக்கு சிகிச்சைபெறும் 5 பத்திரிகையாளர் குடும்பங்களுக்கும் நிதியுதவி அளிக்க இக்குழு அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.
இதில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் உயிரிழந்த 16 பத்திரிகையாளர் குடும்பங்களும் அடங்கும். இவர்களுக்கு பத்திரிகையாளர் நலத்திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படும். கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் உயிரிழந்த 123 பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கு இதுவரை மத்திய அரசு நிதியுதவி வழங்கியுள்ள நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 139 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.