< Back
தேசிய செய்திகள்
அரசு கவிழ்ப்பை விட மக்களுக்கு நல்லது செய்ய குறைவான முயற்சிகளே போதும்: மணீஷ் சிசோடியா
தேசிய செய்திகள்

அரசு கவிழ்ப்பை விட மக்களுக்கு நல்லது செய்ய குறைவான முயற்சிகளே போதும்: மணீஷ் சிசோடியா

தினத்தந்தி
|
25 Aug 2022 4:23 PM IST

அரசு கவிழ்ப்பை விட மக்களுக்கு நல்லது செய்ய குறைவான முயற்சிகளே போதும் என டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா இன்று பேசியுள்ளார்.

உனா,

குஜராத்தில் ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை கவனத்தில் கொண்டு, டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் மற்றும் துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா இருவரும் கடந்த 2 நாட்களாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு பவ்நகர் உள்ளிட்ட இடங்களில் நடந்த பொது கூட்டத்தில் பங்கேற்று பேசினர்.

இதனை தொடர்ந்து, இமாசல பிரதேசத்தில் நடப்பு ஆண்டில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு, உனா நகரில் டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா இன்று கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசும்போது, இமாசல பிரதேசத்தில் அரசு மருத்துவமனைகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்தி, டெல்லியை போன்று மொஹல்லா கிளினிக்குகளையும் நாங்கள் உருவாக்குவோம். சாலை விபத்துகளில் சிக்குவோரின் செலவுகளை அரசே ஏற்கும் என பேசியுள்ளார்.

அரசு என்னை சிறையில் தள்ளும் என எனக்கு அவர்கள் தகவல் அனுப்பினார்கள். அதற்கு பதிலாக ஆம் ஆத்மி மற்றும் கெஜ்ரிவாலை விட்டு விலகுவது நல்லது என என்னிடம் கேட்டு கொண்டனர். அதனுடன், கட்சியையும் உடைத்து விட்டால், எனக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் முடித்து விட்டு, என்னை முதல்-மந்திரியாக்குவோம் என அவர்கள் கூறினர்.

பிற மாநில அரசுகளை அவர்கள் (பா.ஜ.க.) கவிழ்ப்பதற்கும், மிரட்டுவதற்கும் பதிலாக மக்களுக்கான சிறந்த பணிகளை அவர்கள் செய்ய வேண்டும். அரசுகளை கவிழ்ப்பதற்கு ஆகும் முயற்சிகளை விட குறைந்த அளவு முயற்சியிலேயே மக்கள் பணியாற்ற முடியும்.

அவர்கள் தொடர் கொலைக்காரர்கள். ஜனநாயக படுகொலையில் ஈடுபட்டு கொண்டிருக்கிறார்கள் என்று சிசோடியா பேசியுள்ளார்.

மேலும் செய்திகள்