உத்தரகாண்ட் சுரங்கத்தின் வாயிலில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு இருக்கும் 41 ஆம்புலன்ஸ்கள்
|உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசி சுரங்கப் பாதை இடிபாடுகளில் சிக்கிய 41 தொழிலாளர்கள் எந்த நேரத்திலும் வெளியே மீட்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
உத்தர்காசி,
உத்தரகாண்டில் உத்தர்காசி நகரில் சில்கியாரா பகுதியில் சுரங்கத்தில் வேலை செய்து வந்த 41 தொழிலாளர்கள் சுரங்க இடிபாடுகளில் சிக்கி கொண்டனர். அவர்களை வெளியே கொண்டு வரும் மீட்பு பணி முழு வீச்சில்நடைபெற்றது. 16-வது நாளாக மீட்பு பணி தொடர்ந்தது. மீட்பு பணிக்காக டெல்லி, ஜான்சியில் இருந்து நிபுணர்கள் வந்தனர். மீட்பு பணிகள் நடக்கும் போதே , சுரங்கம் திடீரென இடிந்து விழுவதும், அதனால் தாமதம் ஏற்படுவதும் தொடர்ந்து வந்தது.
இதற்கிடையில் சுரங்கப்பாதைக்குள் ஆட்களால் துளையிடும் பணியும் தொடங்கியது. அதற்காக "எலி வளை சுரங்கத் தொழிலாளர்கள்" எனப்படும் சிறிய குகைக்குள்ளும் சென்றும் துளையிடும் அனுபவம் வாய்ந்த 6 சுரங்கப்பணியாளர்கள் குகைப்பகுதிக்கு வந்தனர். அவர்கள், இடிபாடுகளுக்குள் உள்ள 800 மி.மீ. விட்டமுள்ள குழாய்க்குள் சென்று, மண்வெட்டியால் இடிபாடுகளை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபடுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மீட்பு பணிகள் இரவு பகலாக நடைபெற்ற நிலையில், இன்று எஞ்சியுள்ள 60 மீட்டர் தொலைவில் இருந்த இடிபாடுகளை தொழிலாளர்கள் அகற்றினர். சுரங்கத்தில் டிரில்லிங் பணிகள் முடிவடைந்து விட்டதாக அதிகாரிகள் இன்று மதியம் அறிவித்தனர். இதையடுத்து, அங்கு தயாராக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஆம்புலன்ஸ்கள் சுரங்கத்தின் வாயில் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இன்னும் சற்று நேரத்தில் 41 தொழிலாளர்களும் மீட்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, உத்தரகாண்ட் சுரங்கத்தின் வாயிலில் தயார் நிலையில் 41 ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்பட்டு உள்ளது. தொழிலாளர்களை மீட்ட உடன் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.