நிதிஷ் குமாரை பெவிகால் நிறுவனம் விளம்பர தூதராக நியமித்திருக்க வேண்டும்: பிரசாந்த் கிஷோர்
|கூட்டணிகளை முறித்து விட்டு முதல்-மந்திரி நாற்காலியில் தொடரும் நிதிஷ் குமாரை பெவிகால் நிறுவனம் விளம்பர தூதராக நியமித்திருக்க வேண்டும் என பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.
பாட்னா,
பீகாரில் பா.ஜ.க.வுடனான கூட்டணியை முறித்து கொண்டு, காங்கிரஸ் மற்றும் ராஷ்டீரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் மீண்டும் முதல்-மந்திரியாக கடந்த மாதம் நிதிஷ் குமார் பொறுப்பேற்று கொண்டார்.
பீகாரில் எட்டாவது முறையாக அவர் முதல்-மந்திரியான நிலையில், வருகிற பொது தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து பா.ஜ.க.வுக்கு எதிரான அணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இதன் தொடர்ச்சியாக சமீபத்தில் டெல்லி சென்றார். இது அரசியலில் பரபரப்பு ஏற்படுத்தியது. தொடர்ந்து டெல்லியில் முகாமிட்ட அவர் ராகுல் காந்தி, சரத்பவார் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களையும் அடுத்தடுத்து சந்தித்து பேசினார். இதில், முன்னாள் முதல்-மந்திரிகளையும் சந்தித்து ஆதரவு திரட்டினார்.
இந்நிலையில், தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் பற்றி பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் சமீபத்தில் கூறும்போது, கிஷோர் ஒரு விளம்பர நிபுணர் என்றும் பா.ஜ.க.வுக்கு உதவ அவர் விரும்புகிறார் என்றும் கூறினார்.
இதுபற்றி கிஷோர் செய்தியாளர்களின் சந்திப்பில் பேசும்போது, பீகாரின் அரசியல் வளர்ச்சிகள் மாநில அளவில் மட்டுமே இருக்கும். அது தேசிய அரசியலை பாதிக்கும் என நான் நினைக்கவில்லை.
ஒருவர் டெல்லிக்கு சென்று பலரை சந்திக்கிறார் என்றால், அவரது நிலை தேசிய அளவில் வளர்ந்து வருகிறது என்று அர்த்தம் இல்லை. மம்தா பானர்ஜி மற்றும் சந்திரசேகர ராவ் கூட டெல்லியில் பலரை சந்தித்து இருக்கின்றனர் என கூறினார்.
இதில் என்ன புதுமை உள்ளது. எதிர்க்கட்சிகள் சில புதிய விசயங்களை செய்யவுள்ளனர் என நாம் எப்படி எண்ணுவது? 2024 நாடாளுமன்ற தேர்தலில் பெரிய மாற்றம் கொண்டு வரப்படும் என நான் நினைக்கவில்லை என்று கிஷோர் கூறினார்.
இந்நிலையில், பிரசாந்த் கிஷோர் கூறும்போது, பீகாரில் நாம் பல கூட்டணிகள் உருவாகி, முறிந்து போனவற்றை பார்த்திருக்கிறோம். ஆனால், ஒரே ஒரு இணைவு ஒருபோதும் முறியாமல் உள்ளது. முதல்-மந்திரி நாற்காலி மற்றும் நிதிஷ் குமார் இடையேயான இணைப்பு. அது எந்த கூட்டணியாக இருக்கட்டும்.
இது விதிவிலக்கானது. அவரால் மட்டுமே அப்படி செய்ய முடியும். பெவிகால் நிறுவனம் அவரை விளம்பர தூதராக ஆக்கியிருக்க வேண்டும். இது பெவிகால் இணைப்பு. உடையவே உடையாது என்ற வரியை நாம் கேட்டிருப்போம் என கிஷோர் கூறியுள்ளார்.
2024 நாடாளுமன்ற தேர்தலில் மக்களின் வாக்குகளை பெறுவதற்கு, உங்களுக்கு மக்கள் நம்பிக்கை, அடிமட்ட தொண்டர்கள் மற்றும் நம்பிக்கைக்குரிய ஒரு முகம் மற்றும் அதனை மேற்கொள்வதற்கான மக்கள் இயக்கம் ஆகியவை தேவை என அவர் கூறியுள்ளார்.