< Back
தேசிய செய்திகள்
துப்பாக்கியால் சுட்டு பெண் சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை முயற்சி
தேசிய செய்திகள்

துப்பாக்கியால் சுட்டு பெண் சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை முயற்சி

தினத்தந்தி
|
13 Oct 2022 12:15 AM IST

மங்களூருவில், குடும்பத்தகராறு காரணமாக பெண் சப்-இன்ஸ்பெக்டர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நடந்துள்ளது.

மங்களூரு;

பெண் சப்-இன்ஸ்பெக்டர்

ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஓம்வீர்சிங். இவா் மங்களூரு அருகே உள்ள குத்தத்தூர் கிராமத்தில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலையில் துணை கமாண்டராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி ஜோதிபாய் என்ற மனைவி உள்ளார். இவர் பணம்பூரில் உள்ள மங்களூரு புதிய துறைமுகத்தில் அமைந்துள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படையில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.

இதில் ஜோதிபாய்க்கும், அவரது கணவர் ஓம்வீர்சிங்கிற்கும் கடந்த சில நாட்களாக குடும்ப பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று காலை மீண்டும் வழக்கம் போல் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து அவரது கணவர் ஓம்வீர்சிங் வெளியே சென்று விட்டார்.

தற்கொலை முயற்சி

இந்த நிலையில் மனமுடைந்த ஜோதிபாய் தான் வைத்திருந்த துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு கொண்டு தற்ெகாலைக்கு முயன்றுள்ளார். அப்போது சத்தம்கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து வந்து பார்த்தனர். அப்போது ஜோதிபாய் ரத்தவெள்ளத்தில் கீழே விழுந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து அவரை மீட்டு மங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்து பணம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கும், ஆஸ்பத்திரிக்கும் சென்று விசாரித்தனர். விசாரணையில் குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக தான் ஜோதிபாய் துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்