குஜராத் தேர்தல்: தோல்வி பயம் காரணமாக ஆம் ஆத்மியை நசுக்க பாஜக முயற்சிக்கிறது- கெஜ்ரிவால் குற்றச்சாட்டு
|ஆம் ஆத்மிக்கு பெருகி வரும் பிரபலத்தை பாஜகவால் ஜீரணிக்க முடியவில்லை என கெஜ்ரிவால் தெரிவித்தார்.
புதுடெல்லி,
குஜராத்தில் நடப்பு ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 27 ஆண்டுகளாக பா.ஜ.க. ஆட்சியில் உள்ள நிலையில், இந்த முறை ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை பிடிக்கும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் புதுடெல்லியில் நடைபெற்ற ஆம் ஆத்மி கட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் முதல் தேசிய மாநாட்டில் டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று பேசினார். அப்போது அவர் குஜராத் தேர்தலில் தோல்வி பயம் காரணமாக ஆம் ஆத்மி கட்சியை நசுக்க பாஜக முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார்.
இது குறித்து பேசிய கெஜ்ரிவால், "பிரதமர் மோடி தலைமையிலான அரசாங்கம் ஆம் ஆத்மி கட்சி அமைச்சர்கள் மற்றும் தலைவர்களை பொய்யான ஊழல் வழக்குகளில் சிக்க வைக்க முயற்சிக்கிறது.
குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு பெருகி வரும் பிரபலத்தை பாஜகவால் ஜீரணிக்க முடியவில்லை. குஜராத் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக ஆம் ஆத்மியின் செல்வாக்கு அதிகரித்து வருவதால் பாஜக மிகவும் திக்குமுக்காடியுள்ளது" என்றார்.
மேலும் பேசிய கெஜ்ரிவால், குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சியின் நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப வேண்டாம் என்று பல தொலைக்காட்சி சேனல்களின் உரிமையாளர்களை பிரதமரின் ஆலோசகர் ஹிரேன் ஜோஷி எச்சரித்துள்ளதாக குற்றம் சாட்டினார்.
இது தொடர்பாக ஹிரேன் ஜோஷி அனுப்பிய குறுஞ்செய்திகளை செய்தி சேனல் உரிமையாளர்கள் பகிர்ந்து கொண்டால், பிரதமர் மற்றும் ஹிரேன் ஜோஷி இருவரும் தங்கள் முகத்தை நாட்டிற்குக் காட்ட முடியாது என கெஜ்ரிவால் தெரிவித்தார்.