< Back
தேசிய செய்திகள்
என் தந்தைக்கு அரசு தகுந்த பாதுகாப்பு அளித்திருந்தால் உயிருடன் இருந்திருப்பார் - படுகொலை செய்யப்பட்ட கன்னையா லாலின் மகன்
தேசிய செய்திகள்

என் தந்தைக்கு அரசு தகுந்த பாதுகாப்பு அளித்திருந்தால் உயிருடன் இருந்திருப்பார் - படுகொலை செய்யப்பட்ட கன்னையா லாலின் மகன்

தினத்தந்தி
|
1 July 2022 7:52 PM IST

என் தந்தைக்கு அச்சுறுத்தல்கள் வந்தபோது, அரசு நிர்வாகம் தகுந்த பாதுகாப்பை வழங்கியிருந்தால், அவர் உயிருடன் இருந்திருப்பார்.

உதய்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் கொடூரமான முறையில் கன்னையா லால் வெட்டிக்கொல்லப்பட்டார். நபிகள் நாயகம் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக தனது சமூக வலைத்தளத்தில் கன்னையாலால் பதிவு செய்ததால், அவர் கொல்லப்பட்டது தெரியவந்தது.

நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு நபர்களும் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து தேசிய பாதுகாப்பு முகமை (என்.ஐ. ஏ) விசாரணைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இதையடுத்து, என்.ஐ.ஏ வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளது.

இதற்கிடையில், கன்னையா லாலுக்கு அச்சுறுத்தல் இருந்தது தெரிந்தும் அவருக்கு போதிய பாதுகாப்பு அளிக்கவில்லை என்ற புகாரின் பேரில் உதய்பூர் ஐஜி, காவல்கண்காணிப்பாளர் உள்ளிட்ட 32 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், கொலை செய்யப்பட்ட உதய்பூர் தையல்காரர் கன்னையா லாலின் மகன் யாஷ் கூறியதாவது, "என் தந்தைக்கு அச்சுறுத்தல்கள் வந்தபோது, அரசு நிர்வாகம் தகுந்த பாதுகாப்பை வழங்கியிருந்தால், அவர் உயிருடன் இருந்திருப்பார்.

கொலையாளிகளை கூடிய விரைவில் தூக்கிலிட வேண்டும். கொலையாளிகள் இருவரும் தூக்கிலிடப்படும் வரை பதற்றம் குறைய வாய்ப்பில்லை.

கொடூரமான குற்றத்தை செய்துவிட்டு, இப்போது சிறையில் உள்ள குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு, மக்களின் வரி பணத்தில் உணவு வழங்கப்படக்கூடாது. அவர்கள் மிகவும் கொடூரமானவர்கள், வாழ தகுதியற்றவர்கள்." என்று அவர் கூறினார்.

கன்னையா லாலின் மூத்த மகனான யாஷ்(20 வயது), இப்போது குடும்பப் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார். தனக்கு அரசுப் பணி வழங்கினால், குடும்ப பாரம் குறையும் என்றும் அவருக்குப் பெரிதும் உதவும் என்றும் அவர் கூறினார்.

கன்னையா லால் கொலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், நேற்று உதய்பூரில் நூற்றுக்கணக்கானோர் நடத்திய போராட்டத்தின் போது கல் வீச்சு தாக்குதல் நடந்தது. பெரும் சிரமத்திற்கிடையே போலீசார் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்