தொழிலாளி கொலையில் தந்தை-மகன் கைது
|ராய்ச்சூரில் தொழிலாளி கொலையில் தந்தை-மகன் கைது செய்யப்பட்டனர்.
ராய்ச்சூர்:
ராய்ச்சூர் மாவட்டம் சிரவார் அருகே கோடி கிராமத்தை சேர்ந்தவர் பசவராஜ், தொழிலாளி. இவரது தம்பி சரணப்பா என்பவர் பசவராஜ் வீட்டின் அருகே வசிக்கிறார். கடந்த 15-ந் தேதி சரணப்பாவின் மனைவி வீட்டு முன்பாக வைத்து துணிகளை துவைத்தார். அப்போது துணி துவைக்க பயன்படுத்திய தண்ணீர் பசவராஜ் வீட்டு முன்பாக சென்றதாக தெரிகிறது. இதுதொடர்பாக சரணப்பாவின் குடும்பத்திற்கும், பசவராஜிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு இருந்தது. அப்போது பசவராஜை, சரணப்பா, அவரது மகன் அம்பரீஷ் உள்ளிட்டோர் சேர்ந்து கற்களாலும், இரும்பு கம்பியாலும் அடித்து கொன்றனர்.
இதுகுறித்து சிரவார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். மேலும் தலைமறைவாகி விட்ட சரணப்பா, அம்பரீஷ் உள்பட 6 பேரை தேடிவந்தனர். இந்த நிலையில், சரணப்பா, அவரது மகன் அம்பரீசை சிரவார் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த கொலையில் தலைமறைவாக உள்ள மேலும் 4 பேரை போலீசார் தேடிவருகிறார்கள்.