< Back
உலக செய்திகள்
ரஷியாவில் சிறுமி வரைந்த ஓவியத்தால் தந்தைக்கு 2 ஆண்டு சிறை
உலக செய்திகள்

ரஷியாவில் சிறுமி வரைந்த ஓவியத்தால் தந்தைக்கு 2 ஆண்டு சிறை

தினத்தந்தி
|
30 March 2023 3:04 AM IST

ரஷியாவில் சிறுமி வரைந்த ஓவியத்தால் தந்தைக்கு 2 ஆண்டு சிறைதண்டனை விதிக்கப்பட்டது.

மாஸ்கோ,

உக்ரைன் நாட்டின் மீது ரஷியா ஓர் ஆண்டுக்கும் மேலாக போர் தொடுத்து வரும் நிலையில் பெரும்பாலான ரஷியர்களே இ்ந்த போரை கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.

அப்படி போரை எதிர்த்து போராட்டம் நடத்துபவர்கள் மற்றும் போருக்கு எதிராக கருத்து தெரிவிக்கும் நபர்களை ரஷிய அரசு கைது செய்து சிறை தண்டனை விதித்து வருகிறது.

இந்த நிலையில் தலைநகர் மாஸ்கோவை சேர்ந்த அலெக்சி மொஸ்கலியோவ் என்பவரின் 12 வயது மகள் மாஷா, தனது பள்ளிக்கூடத்தில் ஓவியம் வரையும் பயிற்சியின்போது உக்ரைனில் தாய், மகள் மீது ரஷியா ஏவுகணை மழை பொழிவது போல போருக்கு எதிர்ப்பு தெரிவித்து ஓவியம் ஒன்றை வரைந்தார். இது குறித்து பள்ளி தலைவர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

அதன் பேரில் விசாரணை நடத்திய போலீசார் மாஷாவின் தந்தை அலெக்சியின் சமூக வலைத்தள கணக்குகளை ஆய்வு செய்தனர். அதில் அவரும் போருக்கு எதிராக கருத்துகளை பதிவிட்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அலெக்சியை வீட்டு காவலில் வைத்த போலீசார் மகளை அவரிடம் இருந்து பிரித்து, காப்பகத்தில் சேர்த்தனர். இந்த விவகாரம் ரஷிய மனித உரிமை ஆர்வலர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தந்தையும், மகளையும் ஒண்றினைக்கும் படி பல தரப்பில் இருந்து கோரிக்கைகள் வலுத்தன. ஆனால் அதை பொருட்படுத்தாத போலீசார் அலெக்சி மீது வழக்கு பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நேற்று முன்தினம் இந்த வழக்கின் இறுதி விசாரணை நடந்தது. விசாரணை முடிவில் ஆயுதப் படைகளை இழிவுபடுத்தியதாக கூறி அலெக்சிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.

மேலும் செய்திகள்