பெண், மகன்-மகளுடன் தூக்கில் பிணமாக தொங்கிய வழக்கில் திருப்பம்: கணவனே மனைவி-பிள்ளைகளை கொன்றது அம்பலம்
|கோலார் தாலுகாவில், ஒரு பெண் தனது மகன்-மகளுடன் தூக்கில் பிணமாக தொங்கிய வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அந்த பெண்ணின் கணவனே மனைவி மற்றும் பிள்ளைகளை கொன்றது போலீசாரின் விசாரணையில் அம்பலமாகி உள்ளது.
கோலார் தங்கவயல்:
கோலார் தாலுகாவில், ஒரு பெண் தனது மகன்-மகளுடன் தூக்கில் பிணமாக தொங்கிய வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அந்த பெண்ணின் கணவனே மனைவி மற்றும் பிள்ளைகளை கொன்றது போலீசாரின் விசாரணையில் அம்பலமாகி உள்ளது.
தூக்கில் பிணமாக தொங்கினர்
கோலார் (மாவட்டம்) தாலுகா உப்புகுண்டே கிராமத்தை சேர்ந்தவர் சுகுணா(வயது 35). இவரது மகன் பிரிதம் கவுடா(9), மகள் நிஷிதாகவுடா(6). கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர்கள் 3 பேரும் தங்களது வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு கோலார் புறநகர் போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் தூக்கில் தொங்கிய சுகுணா, பிரிதம் கவுடா, நிஷிதா கவுடா ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுபற்றி தீவிர விசாரணை நடத்த போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நாராயணா உத்தரவிட்டார். அதன்பேரில் 2 தனிப்படைகளும் அமைக்கப்பட்டது.
வீட்டுப்பாடம் சொல்லி கொடுக்காததால்...
இதற்கிடையே சுகுணாவின் தம்பி கோபிநாத், கோலார் புறநகர் போலீசில் புகார் அளித்தார். அதில் 'எனது அக்காள் சுகுணாவையும், அவளது பிள்ளைகளையும் அவருடைய கணவர் முரளி மற்றும் உறவினர்கள் சேர்ந்து கொலை செய்திருக்கலாம்' என்று கூறியிருந்தார். அதாவது தன்னுடைய அக்காள் சுகுணா உயிரிழப்பதற்கு முன் தன்னிடம் பேசியதாகவும், அப்போது அவள், தனது பிள்ளைகளுக்கு வீட்டுப்பாடம் சொல்லி கொடுக்காதது குறித்து தன்னுடைய கணவர் முரளியிடம் கேட்டதாகவும் கூறியிருக்கிறார்.
அப்போது ஆத்திரம் அடைந்த முரளி, தனது சகோதரி மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து தன்னிடம் தகராறு செய்ததாக சுகுணா தெரிவித்ததாக போலீசில் கோபிநாத் கூறியிருக்கிறார். மேலும் அதுதொடர்பாக சுகுணா தனக்கு செல்போன் மூலம் குறுந்தகவல் அனுப்பியதாகவும் போலீசில் கோபிநாத் தெரிவித்து அதை சமர்ப்பித்து இருக்கிறார்.
கணவன் உள்பட 6 பேர் கைது
அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சுகுணாவின் கணவர் முரளி மற்றும் உறவினர்களை அழைத்து வந்து தனித்தனியாக விசாரணை நடத்தினர். அப்போது மேற்கண்ட பிரச்சினை தொடர்பாக ஏற்பட்ட தகராறில் சுகுணாவின் கணவர் முரளி, அவரது உறவினர்களான சந்தோஷ், மஞ்சுளா, ராமக்கா, வெங்கடேஷ், சற்குணம் ஆகியோர் சேர்ந்து சுகுணாவை அடித்தே கொலை செய்துள்ளனர்.
இதை பார்த்துக்கொண்டிருந்த நிஷிதா கவுடா, பிரிதம் கவுடா ஆகியோரையும் அடித்துக்கொன்று உடல்களை தூக்கில் தொங்க விட்டு தற்கொலை நாடகமாடி இருக்கிறார்கள் என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இச்சம்பவம் ்தொடர்பாக முரளி, அவரது உறவினர்கள் சந்தோஷ், மஞ்சுளா, ராமக்கா, வெங்கடேஷ், சற்குணம் ஆகிய 6 பேரையும் போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.