< Back
தேசிய செய்திகள்
2 மகள்களை விஷம் வைத்து கொன்றுவிட்டு தந்தை ரெயில் முன் பாய்ந்து தற்கொலை
தேசிய செய்திகள்

2 மகள்களை விஷம் வைத்து கொன்றுவிட்டு தந்தை ரெயில் முன் பாய்ந்து தற்கொலை

தினத்தந்தி
|
29 March 2024 3:50 PM IST

கோழிக்கோடு அருகே 2 மகள்களை விஷம் வைத்து கொன்றுவிட்டு தந்தை ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

கோழிக்கோடு,

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் பையோளி அருகே உள்ள அயனிக்காட்டுப் பகுதியை சேர்ந்தவர் சுமேஷ் (வயது 42). தொழிலாளி. இவரின் மனைவி சொப்பனா. இவர்களுடைய மகள் கோபிகா (15) ஜோதிகா (10). இவர்கள் இருவரும் அந்தப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் முறையே பிளஸ் 1, மற்றும் 5-ம் வகுப்பு படித்து வந்தனர்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சொப்பனா கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். அதன் பின்னர் சுமேஷ் மிகுந்த மன வருத்தத்துடன் காணப்பட்டதாக தெரிகிறது. இந்தநிலையில் கோழிக்கோடு பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் வாலிபர் ஒருவர் ரெயில் மோதி இறந்து கிடப்பதாக பையோளி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீசார் அங்கு சென்று, ரெயில்வே தண்டவாளம் அருகே இறந்து கிடந்தவரின் உடலை மீட்டனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில், இறந்து கிடந்தவர் சுமேஷ் என்பதும், திருவனந்தபுரத்தில் இருந்து கோழிக்கோடு நோக்கி செல்லும் பரசுராம் எக்ஸ்பிரஸ் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.

தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்த அவரின் வீட்டுக்கு சென்றனர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டப்பட்டு இருந்தது. இதையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது போலீசாருக்கு மேலும் அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு சுமேஷின் மகள்களான ஜோதிகா, கோபிகா ஆகியோர் வாயில் நுரைதள்ளியபடி இறந்து கிடந்தனர்.

சுமேஷ்தான் தனது மகள்களை விஷம் வைத்து கொன்றுவிட்டு அவரும் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து சுமேஷ் மற்றும் அவரின் மகள்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்