< Back
தேசிய செய்திகள்
ஓடும் ரெயிலில் ஏற முயன்று தவறி விழுந்து தந்தை-மகன் சாவு
தேசிய செய்திகள்

ஓடும் ரெயிலில் ஏற முயன்று தவறி விழுந்து தந்தை-மகன் சாவு

தினத்தந்தி
|
14 Sept 2022 8:24 PM IST

ஓடும் ரெயிலில் ஏற முயன்றபோது தவறி விழுந்து தந்தையும், மகனும் பலியான சம்பவம் பத்ராவதியில் நடந்துள்ளது.

சிவமொக்கா;


பெங்களூருவில்...

சிவமொக்கா மாவட்டம் பத்ராவதியில் உள்ள இரும்பு தொழிற்சாலையில் பணியாற்றி வந்தவர் மோகன் பிரசாத்(வயது 70). இவர் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்பு பெங்களூருவில் வசித்து வந்தார். இந்த நிலையில் அவர் தனது மகன் அமர்நாத் (வயது 35) உடன் சோ்ந்து வேலை விஷயமாக பத்ராவதிக்கு வந்து இருந்தார். பின்னர் அவர்கள் கடந்த 11-ந்தேதி பெங்களூரு செல்வதற்காக பத்ராவதி ரெயில் நிலையத்திற்கு வந்தனர்.

அவர்கள் தாளகொப்பா-மைசூரு ரெயிலில் செல்ல திட்டமிட்டு இருந்தனர். இந்த நிலையில் தாளகொப்பாவில் இருந்து பத்ராவதி ரெயில் நிலையத்துக்கு மைசூரு ரெயில் வந்தது. சிறிது நேரத்தில் அந்த ரெயில் புறப்பட தயார் ஆனது.

ஓடும் ரெயிலில் ஏற முயன்றார்

இதனால் அதிர்ச்சி அடைந்த அமர்நாத் ஓடும் ரெயிலில் ஏற முயன்றார். அப்போது அவர் கால் தவறி ரெயிலுக்கும், நடைமேடைக்கும் இடையில் விழுந்தார். அதைப்பார்த்து பதறிப்போன மோகன் மகனை காப்பாற்ற ஓடிச்சென்றார். அப்போது அவரும் கால் தவறி ரெயிலுக்கும், நடைமேடைக்கும் இடையே விழுந்தார். இதில் அமர்நாத் தலையில் பலத்த காயம் அடைந்து உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

மோகன் படுகாயம் அடைந்தார். அவரை ரெயில்வே போலீசாரும், ஊழியர்களும் மீட்டு சிகிச்சைக்காக பத்ராவதி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த மோகன் நேற்று முன்தினம் மாலையில் பரிதாபமாக இறந்தார்.

சோகம்

இதனால் இச்சம்பவத்தில் பலி எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது. இதுபற்றி பத்ராவதி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஓடும் ரெயிலில் ஏற முயன்று தந்தையும், மகனும் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்