இந்தியாவில் புதிய வரலாறு - விமானப் படையை சேர்ந்த தந்தையும் மகளும் இணைந்து போர் விமானத்தை இயக்கினர்...!
|இந்தியாவில் விமானப் படையை சேர்ந்த தந்தையும் மகளும் இணைந்து போர் விமானத்தை இயக்கி புதிய வரலாறு படைத்தனர்.
'அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு?' என்று கேட்ட இந்திய நாட்டில் இன்றைக்கு பெண்கள், ஆண்களுக்கு நிகராக படித்து, முன்னேறுவது மட்டுமல்ல, நாட்டை பாதுகாக்கும் ஆயுதப்படைகளிலும் சேர்ந்து நாட்டையும், நம்மையும் காத்து வருகிறார்கள்.
அதுமட்டுமல்ல, "ஆணும், பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவிலோங்கி இவ்வையம் தழைக்குமாம்" என்ற பாரதியின் கனவும் நனவாகி வருகிறது.
தந்தையும், மகளும்
அந்த வகையில், ஒரு தந்தையும், மகளும் சேர்ந்து போர் விமானத்தில் பறந்து புதிய வரலாறு படைத்து பட்டையைக் கிளப்பி இருக்கிறார்கள். அவர்கள், தந்தை 'ஏர் கமடோர்' சஞ்சய் சர்மா, மகள் 'பிளையிங்' அதிகாரி அனன்யா சர்மா ஆவார்கள். இருவரும் விமானப்படையில் அதிகாரிகள்.
இவர்கள் கர்நாடகத்தில் பிடாரில் உள்ள இந்திய விமானப்படை நிலையத்தில் வைத்து 'ஹாக்-132 போர்' விமானத்தில் ஒன்றாக பறந்தனர். இதுவரை இந்தியாவில் எந்தவொரு தந்தையும், மகளும் ஒன்றாய் போர் விமானத்தில் பறந்தது இல்லையாம். எனவே இது புதிய வரலாறாக மாறி இருக்கிறது.
இளம் வயது கனவு
பிடார் இந்திய விமானப்படை நிலையத்தில் இங்குதான் அனன்யா சர்மா பயிற்சி பெற்று வருகிறார்.
இந்த வீராங்கனை சின்னஞ்சிறிய வயதிலேயே தனது தந்தையை கவனித்து வந்திருக்கிறார். இவர் தனது தந்தை, சக விமானிகளுடன் சேர்ந்து பிணைப்பை ஏற்படுத்தி வந்ததைப் பார்த்தே வளர்ந்திருக்கிறார். இதனால் அவர் விமானப்படையில் சேர்ந்து அதிகாரி ஆவதைத் தவிர வேறொரு தொழிலை அல்லது வேலையை கற்பனை செய்து கூட பார்த்தது இல்லையாம். இளம்வயதிலேயே விமானப்படை அதிகாரி ஆக வேண்டும் என்று கனவு வளர்த்து வந்து, அதை நனவாகவும் மாற்றிக்காட்டி இருக்கிறார், மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பியலில் பி.டெக் பட்டம் பெற்ற இந்த வீராங்கனை. இவர் 2016-ம் ஆண்டு இந்திய விமானப்படையில் சேர்ந்து, கடந்த ஆண்டு டிசம்பரில் போர் விமானியாக உயர்ந்துள்ளார்.
இந்தியாவின் இந்த மகள், விமானப்படையில் இன்னும் பல சாதனைகள் படைக்க வேண்டும் என்று ஒட்டுமொத்த தேசமே வாழ்த்துகிறது.