பரூக் அப்துல்லாவுக்கு அமலாக்கத்துறை சம்மன்
|ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தில் முறைகேடு செய்ததாக பரூக் அப்துல்லா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஜம்மு,
தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியுமான பரூக் அப்துல்லா கடந்த 2001 முதல் 2012 வரை அந்த மாநில கிரிக்கெட் சங்கத் தலைவராக பொறுப்பு வகித்தார். அப்போது 2004 முதல் 2009-க்கு இடைப்பட்ட காலத்தில் கிரிக்கெட் சங்கத்தில் ரூ.43.69 கோடி வரை சங்க நிர்வாகிகள் முறைகேடு செய்ததாக ஸ்ரீநகர் ராம்முன்ஷி பாக் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கை அமலாக்கத் துறையினர் விசாரித்து வருகின்றனர். இதில், ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் சங்க நிர்வாகிகளின் ஒத்துழைப்புடன் அஹசன் அகமது மிர்சா என்பவர் சங்க நிதி ரூ.51.90 கோடியை முறைகேடு செய்து அதன் மூலம் தனது சொந்தக் கடனையும் வணிகத் தேவைகளையும் பூர்த்தி செய்து கொண்டது தெரியவந்தது.
இதையடுத்து ரூ.21 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறையினர் முடக்கினர். இதில், பரூக் அப்துல்லாவின் ரூ.11.86 கோடி அசையா சொத்துகளும் அடங்கும்.
இந்தநிலையில், ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்க பணமோசடி வழக்கில் பரூக் அப்துல்லாவை நாளை விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. இதனால் ஜம்முவில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.