காவிரி நீர் பிரச்சினையில் பிரதமர் மோடி தலையிட வேண்டும்; விவசாயிகள், கன்னட அமைப்பினர் கோரிக்கை
|காவிரி நீர் பிரச்சினையில் பிரதமர் மோடி தலையிட வேண்டும் என்று விவசாயிகளும், கன்னட அமைப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மண்டியா:
காவிரி நீர் பிரச்சினையில் பிரதமர் மோடி தலையிட வேண்டும் என்று விவசாயிகளும், கன்னட அமைப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காவிரி நீர் பிரச்சினை
கர்நாடகம்-தமிழகம் இடையே காவிரி நீரை பங்கிட்டு கொள்வது தொடர்பாக தொடர்ந்து பிரச்சினை இருந்து வருகிறது. குறிப்பாக தென்மேற்கு பருவமழை பொய்த்து போகும்போது இந்த பிரச்சினை அதிகரித்து காணப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின் பேரில் 2 முறை கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிட்டது. இந்தநிலையில் மேலும் 18 நாட்களுக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் தமிழகத்திற்கு திறந்துவிடவேண்டும் காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவை எதிர்த்து கே.ஆர்.எஸ்.(கிருஷ்ணராஜசாகர்) அணை அமைந்துள்ள மண்டியா மாவட்டத்தில் போராட்டம் வலுத்துள்ளது. இந்தநிலையில் மண்டியா மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள பூங்காவில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் நேற்று 31-வது நாளாக நீடித்தது. இந்த போராட்டத்திற்கு முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, முன்னாள் மந்திரி ஆர்.அசோக் ஆகியோர் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர்.
பிரதமர் தலையிடவேண்டும்
இதேபோல மண்டியா நகரில் உள்ள சர்.எம்.விசுவேஸ்வரய்யா சர்க்கிள் பகுதியில் கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இந்த போராடத்திற்கு தலைைம தாங்கிய சென்னபசவேஸ்வரா மடத்தின் மடாதிபதி சென்னபசவானந்த சாமி, போராட்டம் நடந்த இடத்திற்கு ஊர்வலமாக சென்றார்.
அங்கு விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்த அவர் கூறுகையில், 'மத்திய, மாநில அரசு காவிரி நீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும். கர்நாடக எம்.பி.க்கள் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவிற்கு எதிராக குரல் கொடுக்கவேண்டும். பிரதமர் மோடி காவிரி விவகாரத்தில் அமைதி காப்பது சரியல்ல. காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் பிரதமர் தலையிட்டு கர்நாடக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்' என்றார்.
இதேபோல சர்.எம்.விசுவேஸ்வரய்யா சர்க்கிள் பகுதியில் சாலை மறியல் போராட்டம் நடத்திய கன்னட அமைப்பினர் மற்றும் விவசாயிகள் காவிரி நீர் பிரச்சினையில் பிரதமர் மோடி தலையிட்டு தீர்வு காணவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.