போராட்டத்தில் விவசாயி மரணம்.. விசாரணைக் குழு அமைக்க ஐகோர்ட்டு உத்தரவு
|பஞ்சாப்-அரியானா எல்லையில் நடந்த வன்முறையில் பஞ்சாப் மாநிலம் பதிண்டா மாவட்டத்தைச் சேர்ந்த இளம் விவசாயி சுப்கரன் சிங் உயிரிழந்தார்.
சண்டிகர்:
பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்கான உத்தரவாதம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் டெல்லி நோக்கி பேரணி நடத்தப்படும் என்றும், டெல்லியில் போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்தனர். அதன்படி விவசாயிகள் நீண்ட கால போராட்டத்திற்கு தேவையான பொருட்களுடன் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து டிராக்டர்களில் பேரணியாக டெல்லி நோக்கி வரத் தொடங்கினர்.
ஆனால் அவர்களை பஞ்சாப்-அரியானா இடையே உள்ள ஷம்பு மற்றும் கனவுரி எல்லைகளில் போலீசார் தடுத்து நிறுத்தி உள்ளனர். இதனால் விவசாயிகள் அங்கேயே கூடாரங்கள் அமைத்து தங்கியிருந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளை தடுப்பதற்காக எல்லையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, கனவுரி எல்லையில் உள்ள விவசாயிகள் கடந்த மாதம் 21-ம் தேதி தடையை மீறி டெல்லி நோக்கி புறப்பட்டனர். அவர்களை போலீசார் தடுத்ததால் வன்முறை ஏற்பட்டது. விவசாயிகளுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் உருவானது. போலீசார் தண்ணீரை பீய்ச்சியடித்தும், தடியடி நடத்தியும், துப்பாக்கி சூடு நடத்தியும் விவசாயிகளை விரட்டியடித்தனர். இந்த வன்முறையில் பஞ்சாப் மாநிலம் பதிண்டா மாவட்டத்தைச் சேர்ந்த இளம் விவசாயி சுப்கரன் சிங் (வயது 22) உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் விவசாயிகள் போராட்டம் தொடர்பான மனுக்கள் மீது பஞ்சாப்-அரியானா ஐகோர்ட்டில் இன்று விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, போராட்டத்தின்போது விவசாயி உயிரிழந்தது தொடர்பாக நீதி விசாரணை நடத்தும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதற்காக ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் 2 ஏடிஜிபிக்கள் கொண்ட குழுவை அமைக்க வேண்டும் என்றும், இந்த குழு ஒரு மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.