< Back
தேசிய செய்திகள்
விவசாயிகள் போராட்டம் 2 நாட்கள் தற்காலிகமாக ஒத்திவைப்பு
தேசிய செய்திகள்

விவசாயிகள் போராட்டம் 2 நாட்கள் தற்காலிகமாக ஒத்திவைப்பு

தினத்தந்தி
|
21 Feb 2024 10:16 PM IST

விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு 5-வது முறையாக அழைப்பு விடுத்துள்ளது.

புதுடெல்லி,

நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டம் கொண்டு வருமாறு மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர். இந்த பிரதான கோரிக்கையுடன் மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப்பை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி நோக்கி கடந்த 13-ந்தேதி பேரணியை தொடங்கினர்.

சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூர் மோர்ச்சா ஆகிய அமைப்புகள் சார்பில் நடத்தப்பட்ட இந்த பேரணியை அரியானா எல்லையான ஷாம்பு, கானாரி ஆகிய இடங்களில் அந்த மாநில போலீசார் தடுத்து நிறுத்தினர். இதைத்தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக விவசாயிகள் அங்கேயே அமர்ந்து போராடி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக இரு மாநிலங்களிலும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நடப்பு ஆண்டில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், இந்த போராட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த நிலையில், விவசாய சங்கத்தினர் மத்திய மந்திரிகளுடன் 8, 12, 15 மற்றும் 18 ஆகிய நாட்களில் பேச்சுவார்த்தைகள் நடத்தினர். எனினும், அது தோல்வியிலேயே முடிந்தது.

இந்த நிலையில், டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் ''டெல்லி சலோ' போராட்டம் 2 நாட்களுக்கு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன. மத்திய அரசு 5-வது முறையாக பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தைக்கு பின்னர் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து வெள்ளிக்கிழமை மாலை முடிவு செய்யப்படும் என்று விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.

மேலும் செய்திகள்