< Back
தேசிய செய்திகள்
விவசாயிகள் போராட்டம் - எந்த சூழலையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்: போலீஸ் சூப்பிரண்டு தகவல்

ஜஜ்ஜார் மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு அர்பித் ஜெயின் 

தேசிய செய்திகள்

விவசாயிகள் போராட்டம் - எந்த சூழலையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்: போலீஸ் சூப்பிரண்டு தகவல்

தினத்தந்தி
|
21 Feb 2024 2:53 PM IST

விவசாயிகளை டெல்லிக்கு சென்று அமைதியாக போராட அனுமதிக்கும்படி அரியானா அரசு மற்றும் மத்திய அரசை பஞ்சாப் மாநில மந்திரி பல்பீர் சிங் வலியுறுத்தி உள்ளார்.

சண்டிகர்:

டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதற்காக, பஞ்சாப் மாநிலத்தில் இருந்து பேரணியாக சென்ற விவசாயிகள், அரியானா மாநிலத்தை ஒட்டியுள்ள ஷம்பு மற்றும் கானவுரி எல்லைகளில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். இந்த எல்லைகளைக் கடந்து டெல்லிக்குள் நுழைய விடாமல் போலீசார் பலமான தடுப்புகளை அமைத்து பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர். இதனால் விவசாயிகள் அந்த எல்லைப் பகுதிகளில் முகாமிட்டு போராட்டம் நடத்திவருகின்றனர்.

குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்பாக மத்திய அரசு அளித்த வாக்குறுதியை ஏற்க மறுத்த விவசாயிகள், இன்று மீண்டும் டெல்லி நோக்கி புறப்பட முயன்றனர். போலீசார் அமைத்துள்ள பேரிகார்டுகளை நோக்கி முன்னேறி வந்தனர். இதைக் கவனித்த போலீசார், கண்ணீர் புகை குண்டுகளை வீசி விவசாயிகளை விரட்டியடித்தனர். அடுத்தகட்டமாக விவசாயிகள் தங்களிடம் உள்ள ஜே.சி.பி. மற்றும் பொக்லைன் இயந்திரங்களை பயன்படுத்தி பேரிகார்டுகளை உடைத்து முன்னேற முயற்சி செய்யலாம் என தெரிகிறது. இதனால் அங்கு பரபரப்பும் பதற்றமும் நிலவுகிறது.

பொக்லைன்கள் மற்றும் ஜே.சி.பி. இயந்திரங்களை பயன்படுத்தி பேரிகார்டுகளை தகர்த்தால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை உருவாகும். அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் நிலைமையை சமாளிக்க ஏராளமான போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் தயார் நிலையில் உள்ளனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அரியானா மாநிலம் ஜஜ்ஜார் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அர்பித் ஜெயின் கூறியதாவது:-

மாவட்டத்தில் உள்ள அனைத்து டி.எஸ்.பி.க்களும் பாதுகாப்பு பணியில் உள்ளனர். எந்த சூழலையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். பாதுகாப்பு பணியில் உள்ள அனைவரும் சிறப்பு பயிற்சி பெற்றவர்கள். மாநிலத்திற்குள் நுழைந்து சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயற்சிப்பவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். எக்ஸ் மற்றும் பிற சமூக ஊடகங்கள் மற்றும் நாளிதழ்கள் வாயிலாக நாங்கள் தொடர்ந்து அறிவிக்கும் போக்குவரத்து வழிகாட்டுதல்களைப் பின்பற்றி பொதுமக்கள் தங்கள் பயணங்களை மேற்கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். மக்கள் பீதியடைய வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

இது ஒருபுறமிருக்க, விவசாயிகளை டெல்லிக்கு சென்று அமைதியாக போராட அனுமதிக்கும்படி அரியானா அரசு மற்றும் மத்திய அரசை பஞ்சாப் மாநில மந்திரி பல்பீர் சிங் வலியுறுத்தி உள்ளார்.

மேலும் செய்திகள்