< Back
தேசிய செய்திகள்
மைசூருவில் மண்பானைகளை தலையில் சுமந்து விவசாயிகள் போராட்டம்
தேசிய செய்திகள்

மைசூருவில் மண்பானைகளை தலையில் சுமந்து விவசாயிகள் போராட்டம்

தினத்தந்தி
|
23 Sept 2023 12:15 AM IST

தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறப்பதை கண்டித்து மைசூருவில் மண்பானைகளை தலையில் சுமந்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

மைசூரு

காவிரி பிரச்சினை

கர்நாடகம்- தமிழகம் இடையே நதிநீர் பங்கீடு பிரச்சினை பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதுதொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது.

இந்தநிலையில் கடந்த மாதம் காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரையின் பேரில் தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்க கர்நாடகத்துக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.

அதன்படி 9 நாட்கள் வினாடிக்கு 9 ஆயிரம் கனஅடி வரை தமிழக்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

இந்தநிலையில் கடந்த 18-ந் தேதி காவிரி மேலாண்மை ஆணையம் மீண்டும் 15 நாட்களுக்கு தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. இதனை கண்டித்து கன்னட அமைப்பினர், விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

தலையில் மண்பானைகளை

மண்டியாவில் விவசாயிகள் காவிரி நீரில் இறங்கியும், சாலையில் படுத்து கிடந்தும் போராட்டம் நடத்தினர். இதேப்போல் பெங்களூருவிலும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்தநிலையில் நேற்று மைசூருவில் மாவட்ட பஞ்சாயத்து அலுவலகம் முன்பு விவசாயிகள் தலையில் மண்பானைகளை சுமந்து போராட்டம் நடத்தினர்.

அப்போது போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கூறுகையில், காவிரி விவகாரத்தில் மத்திய அரசு கர்நாடக மக்களுக்கு அநியாயம் செய்துள்ளது.

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை கர்நாடக மக்களால் ஏற்று கொள்ள முடியாது. கர்நாடக அணைகளில் தண்ணீர் இல்லாதபோது எப்படி தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியும்.

விவசாயிகள் போராட்டம்

இங்குள்ள நிலைமை காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு தெரியவில்லை. அப்போது மந்திரி பைரதி சுரேஷ் மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் வளர்ச்சி பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி கொண்டிருந்தார். அப்போது மந்திரிக்கு எதிராக விவசாயிகள் கோஷங்கள் எழுப்பினர்.

பின்னர் தடுப்புச்சுவர் மற்றும் இரும்பு கேட்டில் ஏறி அலுவலகத்திற்கு உள்ளே விவசாயிகள் நுழைய முயன்றனர். அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் 25-க்கும் மேற்பட்ட விவசாயிகளை கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர்.

பின்னர் அவர்களை மாலையில் போலீசார் விடுவித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்