< Back
தேசிய செய்திகள்
தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க எதிர்ப்பு: மண்டியாவில் விவசாயிகள் 50-வது நாளாக போராட்டம்
தேசிய செய்திகள்

தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க எதிர்ப்பு: மண்டியாவில் விவசாயிகள் 50-வது நாளாக போராட்டம்

தினத்தந்தி
|
23 Oct 2023 12:15 AM IST

தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து மண்டியாவில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 50-வது நாளை எட்டியுள்ளது.

மண்டியா:

கர்நாடகம்-தமிழகம் இடையே பல ஆண்டுகளாக காவிரி நீரை பங்கிடுவது தொடர்பாக பிரச்சினைகள் நீடித்து வருகிறது. இந்தநிலையில் காவிரி மேலாண்மை ஆணையம் தமிழகத்திற்கு வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் திறக்கவேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி ஆகஸ்டு மாதம் முதல் தமிழகத்திற்கு காவிரியில் வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டு வருகிறது.

இதற்கு கர்நாடக விவசாயிகள் மற்றும் கன்னட அமைப்பினர், பா.ஜனதா, ஜனதா தளம் (எஸ்) கட்சியை சேர்ந்தவர்கள் தீவிர போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக கே.ஆர்.எஸ். (கிருஷ்ணராஜசாகர்) அணை அமைந்துள்ள மண்டியாவில் விவசாயிகள், கன்னட அமைப்பினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த போராட்டம் நேற்றுடன் 50-வது நாளை எட்டியது. மண்டியா கலெக்டர் அலுவலகம் எதிரே அமைந்துள்ள சர் எம்.விசுவேஸ்வரய்யா பூங்காவில் காவிரி நீர் பாதுகாப்பு குழுவை சேர்ந்த விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்று முன்தினம் இந்த போராட்டத்தில் மண்டியாவில் உள்ள அரசு கலை கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர். இந்தநிலையில் மண்டியா மற்றும் மத்தூரை சேர்ந்த கிராம மக்கள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக மண்டியாவை அடுத்த சிவள்ளி, குன்ன நாயக்கனஹள்ளி, கோரவாலே, மரடிப்பூர் மற்றும் மத்தூர் தாலுகாவில் உள்ள நகர்கெரே கிராம பஞ்சாயத்திற்குட்பட்ட ஹுலிகெரேபூர், உப்பாரதொட்டி, சோம்பூர், வைத்தியநாத்பூர், மலகரனஹள்ளி ஆகிய விவசாய கிராமத்தை சேர்ந்த மக்கள் ஆதரவு தெரிவித்தனர். முன்னதாக இவர்கள் சர் எம்.விசுவேஸ்வரய்யா சிலை முன்பு போராட்டம் நடத்திய அவர்கள் பின்னர் பேரணியாக சென்று பூங்காவிற்கு ெச்னறனர். அங்கு காவிரி நீர் பாதுகாப்பு குழுவினருடன் சேர்ந்து அவர்கள் போராட்டம் நடத்தினர்.

அப்போது அவர்கள் கூறுகையில், கர்நாடகத்தில் உள்ள நீர்நிலைகள் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. இதனால் குடிப்பதற்கு மற்றும் விவசாயத்திற்கு கூட நீர் கிடைக்காமல் மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்தநிலையில் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் மண்டியா மாவட்டம் மட்டுமின்றி பிற மாவட்டத்தை சேர்ந்த மக்களுக்கும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

எனவே மத்திய, மாநில அரசுக்கள் இடர்பாட்டு சூத்திரத்தை கையாண்டு இந்த காவிரி நீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும். இல்லையென்றால் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. எனவே மத்திய, மாநில அரசுகள் காவிரி மேலண்மை ஆணையத்திடம் முறையிட்டு இ்ந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். இல்லையென்றால் எங்கள் போராட்டம் தொடரும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்