காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு; மண்டியாவில் 7-வது நாளாக தொடரும் போராட்டம்
|காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து மண்டியாவில் 7-வது நாளாக விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெங்களூரு:
காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து மண்டியாவில் 7-வது நாளாக விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவிரி பிரச்சினை
கர்நாடகத்திற்கும், தமிழகத்திற்கும் இடையே காவிரி பிரச்சினை நீண்ட காலமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் கர்நாடகத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. இதனால் காவிரி படுகையில் உள்ள கிருஷ்ணராஜசாகர்(கே.ஆர்.எஸ்.), ஹாரங்கி, ஹேமாவதி உள்ளிட்ட அணைகள் நிரம்பவில்லை. கபினி அணை மட்டும் நிரம்பி இருந்தது.
இந்த நிலையில் தமிழகத்திற்கு காவிரியில் வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கர்நாடகத்திற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி மண்டியா மாவட்டத்தில் உள்ள கே.ஆர்.எஸ். அணையில் இருந்து, மைசூரு மாவட்டத்தில் உள்ள கபினி அணையில் இருந்தும் கடந்த 6 நாட்களாக தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
தண்ணீர் திறப்பு
அதன்படி நேற்று 7-வது நாளாகவும் இரு அணைகளில் இருந்தும் தண்ணீர் திறக்கப்பட்டது. கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் நேற்று காலை 8 மணி நிலவரப்படி 2,273.62 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 274 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 604 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.
இதுபோல் 124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் நேற்று காலை 8 மணி நிலவரப்படி 99.06 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 3,988 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 6.149 கன அடி தண்ணீர் காவிரியில் திறந்து விடப்பட்டு உள்ளது. இதன்மூலம் இந்த 2 அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு காவிரியில் வினாடிக்கு 6,153 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
போராட்டம்
காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது நாள் முதல் கே.ஆர்.எஸ். அணை, மண்டியா, ஸ்ரீரங்கப்பட்டணா என பல்வேறு பகுதிகளில் விவசாயிகள், கன்னட அமைப்பினர், அரசியல் கட்சியினர் என பல தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறப்பதை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று 7-வது நாளாகவும் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறப்பதை கண்டித்து மண்டியா மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்தன.
கே.ஆர்.எஸ். அணையின் தெற்கு நுழைவு வாயில் பகுதியில் கர்நாடக மாநில விவசாயிகள் சங்கத்தினர் சார்பில் நடந்த போராட்டத்தில் ஏராளமான பெண்கள் தலையில் காலி குடங்களை சுமந்தபடி ஊர்வலமாக வந்து போராட்டம் நடத்தினர். அவர்கள் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறப்பதை உடனடியாக நிறுத்தக்கோரி கோஷங்கள் எழுப்பினர்.
ஊர்வலம்
ஸ்ரீரங்கப்பட்டணா டவுனில் உள்ள மினி விதான சவுதா முன்பு கன்னட அமைப்பினர், விவசாயிகள் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சியினர் ஒன்றாக சேர்ந்து போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் நெற்றியில் நாமம் போட்டு மணி அடித்து தண்ணீருக்காக யாசகம் கேட்பதுபோல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின்போது அவர்கள் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறப்பை உடனடியாக நிறுத்தக்கோரி அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
முன்னதாக அவர்கள் ஸ்ரீரங்கப்பட்டணா டவுனில் உள்ள குவெம்பு சர்க்கிள் பகுதியில் இருந்து மினி விதான சவுதாவுக்கு ஊர்வலமாக வந்தனர். ஊர்வலத்தின்போது 'கோவிந்தா, கோவிந்தா காவிரி நீர் இல்லை கோவிந்தா' என்று கோஷமிட்டனர். மத்திய, மாநில அரசுகள், காவிரி மேலாண்மை ஆணையம் ஆகியவற்றுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர்.
ரத்தத்தில் கையெழுத்திட்டு கவர்னருக்கு பா.ஜனதாவினர் கடிதம்
விவசாயிகள், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் மண்டியாவில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில், மண்டியா மாவட்ட பா.ஜனதாவினர் நேற்று காவிரியில் தண்ணீர் திறப்பதை கண்டித்து கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள், காவிரியில் தண்ணீர் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், மாவட்ட பொறுப்பு மந்திரி செலுவராயசாமிக்கு எதிராக கோஷம் எழுப்பினர். பின்னர் காவிரியில் தண்ணீர் திறக்கப்படுவதை நிறுத்த கோரி பா.ஜனதாவினர் தங்கள் ரத்தத்தால் கையெழுத்திட்டு கவர்னருக்கு கடிதம் அனுப்பி வைத்தனர். அதாவது, அந்த கடிதத்தை கவர்னருக்கு அனுப்பும்படி பா.ஜனதாவினர் மாவட்ட கலெக்டர் குமாரிடம் கொடுத்தனர்.