< Back
தேசிய செய்திகள்
2-வது நாளாக தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு: மண்டியாவில் விவசாயிகள் அரை நிர்வாண போராட்டம்
தேசிய செய்திகள்

2-வது நாளாக தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு: மண்டியாவில் விவசாயிகள் அரை நிர்வாண போராட்டம்

தினத்தந்தி
|
1 Sept 2023 2:26 AM IST

தமிழகத்திற்கு 2-வது நாளாக வினாடிக்கு 7,749 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மண்டியாவில் விவசாயிகள் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மண்டியா:

கர்நாடகத்தில் ேபாதிய மழை பெய்யாததால் கர்நாடக அணைகளில் நீர் இருப்பு குறைவாக உள்ளது. இந்த நிலையில் தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழ்நாடு அரசு, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இதைத்தொடர்ந்து கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட்டது.

ஆனால் இந்த காவிரி நீர் போதாது என கோரி தமிழகம் காவிரி ஒழுங்காற்று குழு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்திடம் முறையிட்டது. இதையடுத்து இரு குழுவினரும் தமிழகத்திற்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் வீதம் 15 நாட்களுக்கு காவிரி நீரை திறந்துவிடும்படி கர்நாடகத்திற்கு உத்தரவிட்டது. அதன்படி நேற்று முன்தினம் முதல் கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.) அணையில் இருந்து வினாடிக்கு 7,380 கன அடி தண்ணீரை திறந்துவிட்டது. இது கர்நாடக விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சுயேச்சை எம்.எல்.ஏ.வும், விவசாய சங்க நிர்வாகியுமான தர்ஷன் புட்டண்ணய்யா எம்.எல்.ஏ. தலைமையில் விவசாயிகள், கே.ஆர்.எஸ். அணையின் முன்பு திரண்டு போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடுவதை நிறுத்தவேண்டும் என்று கோஷமிட்டனர்.

மேலும் அணையின் முன்பு அமர்ந்த விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். விடிய விடிய இந்த போராட்டம் நடந்தது. நள்ளிரவு தீப்பந்தம் ஏந்தியும், கைகோர்த்து மனித சங்கிலி போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

இந்தநிலையில் நேற்று காலை கே.ஆர்.எஸ் அணையில் இருந்து 2-வது நாளாகவும் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அதாவது வினாடிக்கு 7,279 கன அடி தண்ணீர் தமிழகத்திற்கு செல்கிறது. இதனை கண்டித்து 2-வது நாளாக தர்ஷன் புட்டண்ணய்யா எம்.எல்.ஏ. தலைமையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடுவதை நிறுத்தும் வரை போராட்டம் தொடரும் என்று அவர்கள் அறிவித்து உள்ளனர்.

மேலும் தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்கப்பட்டதை கண்டித்து ஸ்ரீரங்கப்பட்டணாவில் விவசாயிகள் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள்

ஸ்ரீரங்கப்பட்டணாவில் உள்ள காவிரி ஆற்றில் இறங்கிய தண்ணீரை கையில் ஏந்தி, தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதை நிறுத்த கோரியும், மண்டியாவில் உள்ள விளை பயிர்களுக்கு பாசன நீர் திறக்கவும் வலியுறுத்தி கோஷமிட்டனர்.

இதனால் மண்டியாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையொட்டி கே.ஆர்.எஸ். அணை பகுதி, அருகில் உள்ள பிருந்தாவன் கார்டன் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நேற்றைய நிலவரப்படி 124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் 100 அடியாக குறைந்தது. அணைக்கு வினாடிக்கு 1,610 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் அணையின் நீர்மட்டம் 123 அடியாக இருந்ததும், அப்போது அணைக்கு நீர்வரத்து 25 ஆயிரம் கனஅடியாக இருந்தது. அந்த நீர் அப்படியே தமிழகத்திற்கு திறந்துவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்