< Back
தேசிய செய்திகள்
விவசாயிகள் போராட்டம்.. டெல்லி எல்லைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாகலாம்: வாகன ஓட்டிகளே உஷார்..!
தேசிய செய்திகள்

விவசாயிகள் போராட்டம்.. டெல்லி எல்லைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாகலாம்: வாகன ஓட்டிகளே உஷார்..!

தினத்தந்தி
|
6 March 2024 5:03 PM IST

டெல்லி நோக்கி விவசாயிகள் அதிக அளவில் வரலாம் என்பதால் டெல்லி எல்லைகளில் கூடுதல் போலீசார் மற்றும் துணை ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

புதுடெல்லி:

பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்கான உத்தரவாதம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் டெல்லி நோக்கி பேரணி நடத்தப்படும் என்றும், டெல்லியில் போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்தனர். அதன்படி விவசாயிகள் நீண்ட கால போராட்டத்திற்கு தேவையான பொருட்களுடன் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து டிராக்டர்களில் பேரணியாக டெல்லி நோக்கி வரத் தொடங்கினர். ஆனால் அவர்களை பஞ்சாப்-அரியானா இடையே உள்ள ஷம்பு மற்றும் கனவுரி எல்லைகளில் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் விவசாயிகள் அங்கேயே கூடாரங்கள் அமைத்து தங்கியிருந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதேபோல் விவசாயிகள் மற்ற பாதைகள் மூலம் டெல்லிக்குள் நுழைந்துவிடாதபடி டெல்லியின் எல்லைகளில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், நாடு முழுவதிலும் உள்ள விவசாயிகள் புதன்கிழமை (இன்று) டெல்லிக்கு வரும்படி போராட்டத்தை முன்னெடுத்து செல்லும் கிசான் மஸ்தூர் மோர்ச்சா மற்றும் சம்யுக்த கிசான் மோர்ச்சா ஆகிய விவசாய அமைப்புகளின் தலைவர்கள் அழைப்பு விடுத்தனர். அத்துடன், வரும் 10-ம் தேதி நாடுதழுவிய ரெயில் மறியல் போராட்டத்திற்கும் அழைப்பு விடுத்தனர். இதனை ஏற்று விவசாயிகள் டெல்லிக்கு புறப்பட்டு வந்துகொண்டிருக்கிறார்கள். டெல்லி ஜந்தர் மந்தர் பகுதிக்கு தடையை மீறி இன்று வர திட்டமிட்டுள்ளனர்.

இதனால் டெல்லி எல்லைகளில் பதற்றம் அதிகரித்தது. கூடுதல் போலீசார் மற்றும் துணை ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ரெயில் மற்றும் பேருந்து போன்ற பொது போக்குவரத்தை பயன்படுத்தி விவசாயிகள் டெல்லிக்கு வருவார்கள் என்பதால் டெல்லியில் உள்ள பேருந்து நிலையங்கள், ரெயில் நிலையங்கள் மற்றும் மெட்ரோ நிலையங்களில் போலீசார் மற்றும் துணை ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

விவசாய சங்க தலைவர்களின் அழைப்பை ஏற்று இன்று காலையிலேயே டெல்லி-அரியானா எல்லைப்பகுதியான சிங்கு எல்லையில் விவசாயிகள் வரத் தொடங்கினர். இதனால் போக்குவரத்து நெரிசல் காரணமாக, போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்பட்சத்தில், போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரித்து, வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்திக்க நேரிடும். விவசாயிகளால் வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் போக்குவரத்து நெரிசலை சந்திக்க நேரிடும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

இதுபற்றி போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "டெல்லி எல்லைகளான திக்ரி, சிங்கு, காசிபூர் எல்லைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் எல்லைகளை மூடவில்லை. போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படும். ஆனால் வாகன சோதனை தொடர்ந்து நடைபெறும். இதுதவிர ரெயில் நிலையங்கள், மெட்ரோ நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது" என்றார்.

"திக்ரி மற்றும் சிங்கு எல்லைகளில் பயணிகளுக்காக தடுப்புகள் தற்காலிகமாக அகற்றப்பட்டுள்ளன. எனினும் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது. டெல்லியில் ஏற்கனவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் ஒன்றுகூடுவதற்கும், கூட்டம் நடத்துவதற்கும் அனுமதிக்க மாட்டோம்" என மற்றொரு அதிகாரி கூறினார்.

மேலும் செய்திகள்