சொத்து தகராறில் விவசாயி கொலை
|சிட்லகட்டாவில் சொத்து தகராறில் விவசாயியை கொலை செய்த அண்ணணை போலீசாா் வலைவீசி தேடிவருகிறார்கள்.
சிட்லகட்டா
சிக்பள்ளாப்பூா் மாவட்டம் சிட்லகட்டா தாலுகா சிக்கதாசரஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முனியப்பா (வயது 50). விவசாயி. இவரது அண்ணன் பட்டராயப்பா.சொத்து பிரச்சினை தொடர்பாக அண்ணன்-தம்பி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று காலை முனியப்பா தனது தோட்டத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பட்டராயப்பா, சொத்து பிரச்சினை தொடர்பாக தம்பி முனியப்பாவுடன் தகராறு செய்தார்.
அப்போது அங்கிருந்தவர்கள் 2 பேரையும் தடுக்க முயன்றனர். அந்த சமயத்தில், பட்டராயப்பா தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து முனியப்பாவை சரமாரியாக குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த முனியப்பா, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து பட்டராயப்பா அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் சிட்லகட்டா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.
பின்னர் போலீசார், கொலையான முனியப்பாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சிட்லகட்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய பட்டராயப்பாவை வலைவீசி தேடி வருகிறார்கள்.