< Back
தேசிய செய்திகள்
சொத்து தகராறில் விவசாயி படுகொலை; சகோதரர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
தேசிய செய்திகள்

சொத்து தகராறில் விவசாயி படுகொலை; சகோதரர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

தினத்தந்தி
|
16 July 2023 12:15 AM IST

மடிகேரியில் சொத்து தகராறில் விவசாயியை கொலை செய்த சகோதரர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

குடகு:

குடகு மாவட்டம் மடிகேரி தாலுகா சம்பாஜே அருகே சொம்பு கிராமத்தை சேர்ந்தவர் உஸ்மான். விவசாயி. இவரது சகோதரர்கள் சத்தார், ரபீக், இசுபு, அப்பாஸ். இவர்களுக்கு சொந்தமாக அந்தப்பகுதியில் 50 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. உஸ்மானுக்கு அரந்தோடு பகுதியிலும் சொந்தமாக நிலம் இருந்தது.

இந்த நிலையில் 50 ஏக்கர் நிலம் தொடர்பாக உஸ்மான் மற்றும் அவரது சகோதரர்கள் இடையே சொத்து தகராறு இருந்து வந்தது. மேலும் அவர்களுக்குள் அடிக்கடி தகராறும் ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் உஸ்மான் தனது நிலத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது அவரது சகோதரர்கள் சத்தார், ரபீக், யூசுப், அப்பாஸ் ஆகியோர் வந்தனர். அவர்கள் உஸ்மானுடன் தகராறில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் உஸ்மானை சரமாரியாக குத்தினர். இதில் பலத்த கத்திக்குத்து காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து அவரது சகோதரர்கள் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் சம்பாஜே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

பின்னர் போலீசார், கொலையான உஸ்மானின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், சொத்து தகராறில் உஸ்மானை அவரது சகோதரர்களே கத்தியால் குத்தி படுகொலை செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து சம்பாஜே போலீசார் வழக்குப்பதிவு செய்து சத்தார், ரபீக், யூசுப், அப்பாஸ் ஆகிய 4 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்