< Back
தேசிய செய்திகள்
பிப்ரவரி 16-ந்தேதி விவசாய சங்கங்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தம் - ராகேஷ் திகாத் தகவல்

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

பிப்ரவரி 16-ந்தேதி விவசாய சங்கங்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தம் - ராகேஷ் திகாத் தகவல்

தினத்தந்தி
|
25 Jan 2024 5:17 AM IST

சன்யுக்தா கிசான் மோர்ச்சா உள்பட பல்வேறு விவசாய அமைப்புகள் இந்த நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் பங்கேற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நொய்டா,

பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உத்தரவாத சட்டம், சேதமடைந்த பயிர்களுக்கான இழப்பீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாய அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. இது தொடர்பாக மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க தொடர் போராட்டங்களையும் நடத்தி வருகின்றன. ஆனால் இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால் அவர்கள் தொடர்ந்து ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

எனவே தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த மாதம் (பிப்ரவரி) 16-ந்தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் (பாரத் பந்த்) ஈடுபட உள்ளதாக விவசாய சங்கங்கள் அறிவித்து உள்ளன.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பாரதிய கிசான் யூனியன் விவசாய அமைப்பின் தேசிய செய்தி தொடர்பாளர் ராகேஷ் திகாயத், "பிப்ரவரி 16-ந்தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளோம். சன்யுக்தா கிசான் மோர்ச்சா உள்பட பல்வேறு விவசாய அமைப்புகள் இதில் பங்கேற்கும். விவசாயிகளும் அன்றைய தினம் தங்கள் விளைநிலங்களுக்குச் செல்லக்கூடாது.

ஏற்கனவே அமாவாசை தினத்தன்று விவசாயிகள் தங்கள் வயல்களில் வேலை செய்வதை தவிர்த்தனர். அதேபோல் பிப்ரவரி 16-ந் தேதி விவசாயிகளுக்கு மட்டும் அமாவாசை. இது நாட்டுக்கு ஒரு பெரிய செய்தியை கொடுக்கும்.

இந்த போராட்டத்துக்கு ஆதரவளிக்குமாறு வர்த்தகர்களை கேட்டுக்கொள்கிறோம். வணிகர்கள் தங்கள் கடைகளை அடைத்து விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என வேண்டுகிறோம். அன்றைய தினம் எதையும் வாங்க வேண்டாம் என பொதுமக்களையும் வலியுறுத்துகிறோம்.

இந்த வேலை நிறுத்தத்தின் பின்னணியில் பல்வேறு காரணங்கள் உண்டு. இதில் பிரதான காரணம், பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்டப்பூர்வ உத்தரவாத சட்டம் ஆகும். மேலும் வேலையில்லா திண்டாட்டம், அக்னிவீர் திட்டம், ஓய்வூதிய திட்டம் போன்ற கோரிக்கைகளும் அடங்கும். இந்த போராட்டத்தில் மற்ற அமைப்புகளும் பங்கேற்பதால் இது விவசாயிகள் போராட்டமாக மட்டும் இருக்கப் போவதில்லை.

விபத்தை ஏற்படுத்தி தகவல் தெரிவிக்காமல் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு எதிரான புதிய கடுமையான சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஓட்டுனர் சமூகமும் பிப்ரவரி 16-ந்தேதி வேலைநிறுத்தம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது" என்று அவர் கூறினார்.

மேலும் செய்திகள்