< Back
தேசிய செய்திகள்
பிரியப்பட்டணாவில் விஷம் குடித்து விவசாயி தற்கொலை
தேசிய செய்திகள்

பிரியப்பட்டணாவில் விஷம் குடித்து விவசாயி தற்கொலை

தினத்தந்தி
|
1 Oct 2023 12:15 AM IST

பிரியப்பட்டணாவில் கடன் தொல்லையால் விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

பிரியப்பட்டணா

விவசாயி

மைசூரு மாவட்டம் பிரியப்பட்டணா தாலுகா ஹலியூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவண்ணா (வயது 61). விவசாயி. இவருக்கு சொந்தமாக அந்தப்பகுதியில் 4 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தில் சோளம், ராகி பயிர்களை சிவண்ணா சாகுபடி செய்து வந்தார்.

இந்த நிலையில் தனது நிலத்தில் மக்காச்சோளம் பயிர் செய்வதற்காக வங்கியில் ரூ.3 லட்சமும் தெரிந்தவர்களிடம் ரூ.2 லட்சமும் கடன் வாங்கி இருந்தார்.

இந்த நிலையில் மழை சரியாக பெய்யாததால் விளைச்சல் பாதிக்கப்பட்டது. இதனால் விவசாயத்தில் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டது. இதன்காரணமாக வாங்கிய கடனை திரும்ப கொடுக்க முடியாமல் சிவண்ணா அவதிப்பட்டு வந்தார்.

தற்கொலை

இந்த நிலையில் கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப கேட்டு அவருக்கு தொந்தரவு கொடுத்து வந்ததாக தெரிகிறது. மேலும் வங்கியில் இருந்து நோட்டீசும் வந்ததாக தெரிகிறது. இதனால், சிவண்ணா மனமுடைந்து காணப்பட்டார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் விளைநிலத்துக்கு சென்ற சிவண்ணா திரும்பி வீட்டுக்கு வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர் விளைநிலத்துக்கு சென்று பார்த்தனர்.

அப்போது பூச்சிக்கொல்லி (விஷம்) மருந்தை குடித்த நிலையில் சிவண்ணா மயங்கி கிடந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர், சிவண்ணாவை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அப்போது சிவண்ணா ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

போலீஸ் விசாரணை

இதுபற்றிய தகவல் அறிந்ததும் பிரியப்பட்டணா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் சிவண்ணாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், கடன் தொல்லையால் சிவண்ணா விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

இதுகுறித்து பிரியப்பட்டணா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்