< Back
தேசிய செய்திகள்
மங்களூரு விமான நிலையத்தில் பயணிகள் மேம்பாட்டு கட்டணம் உயர்வு
தேசிய செய்திகள்

மங்களூரு விமான நிலையத்தில் பயணிகள் மேம்பாட்டு கட்டணம் உயர்வு

தினத்தந்தி
|
22 Aug 2022 9:51 PM IST

மங்களூரு விமான நிலையத்தில் பயணிகள் மேம்பாட்டு கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது.

பெங்களூரு:

மங்களூரு விமான நிலையத்தில் பயணிகள் மேம்பாட்டு கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது.

மங்களூரு விமான நிலையம்

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே பஜ்பேவில் சர்வதேச விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த விமான நிலையத்தில் இருந்து சென்னை, மும்பை, திருவனந்தபுரம், ஐதராபாத், டெல்லி உள்ளிட்ட நகரங்களுக்கும், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா உள்பட பல்வேறு வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் மங்களூரு விமான நிலையத்தை அதானி குழுமம் வாங்கியது. தற்போது அதானி குழுமம் தான் மங்களூரு விமான நிலையத்தை நிர்வகித்து வருகிறது.

இந்த நிலையில் மங்களூரு விமான நிலையத்தில் பயணிகள் மேம்பாட்டு கட்டணத்தை உயர்த்த அதானி குழுமம் முடிவு செய்துள்ளது. அதாவது இந்த கட்டண உயர்வு 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதலே கொண்டுவர அதானி குழுமம் திட்டமிட்டது.

கட்டணம் உயர்வு

ஆனால் விமானங்கள் பொருளாதார ஒழுங்குமுறை ஆணையத்தின் கட்டண நிர்ணய பிரிவு இதற்கு அனுமதி வழங்கவில்லை. இந்த நிலையில் தற்போது இந்த கட்டண உயர்வுக்கு அந்த பிரிவு அனுமதி வழங்கி உள்ளது. அதன்பேரில் இந்த கட்டண உயர்வு வருகிற 2026-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை படிப்படியாக உயர்த்தப்படும். இது உள்நாட்டு விமானங்களுக்கு மட்டும் பொருந்தும்.

அதன்படி தற்போது உள்நாட்டு விமான பயணிகளுக்கு ரூ.150 ஆக இருக்கும் கட்டணம் ரூ.250 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது படிப்படியாக 2026-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை உயர்த்தப்பட்டு ரூ.725 ஆக நிர்ணயிக்கப்படும்.

ரூ.1,200 ஆக நிர்ணயம்

இதுபோல் வெளிநாடு விமான பயணிகளுக்கும் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. ஆனால் அது இங்கிருந்து புறப்படும் விமானங்களுக்கு மட்டும்தான் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. அந்த கட்டணம் தற்போது 525 ஆக உள்ளது. அது படிப்படியாக உயர்த்தப்பட்டு 2026-ம் ஆண்டு மார்ச் மாதம் ரூ.1,200 ஆக நிர்ணயிக்கப்படும்.

இதுதவிர மங்களூரு விமான நிலையத்தில் தரையிறங்கும் விமானங்களுக்கும், நிறுத்தி வைக்கப்படும் விமானங்களுக்குமான கட்டணத்தை உயர்த்தவும் அதானி குழுமம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதுபற்றி மங்களூரு விமான நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-

வளர்ச்சி பணிகள்

பஜ்பே விமான நிலையத்தை நிர்வகிக்கும் பொறுப்பை கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அதானி குழுமம் ஏற்றது. கடந்த 2010-ம் ஆண்டு முதல் விமான நிலையத்தில் எந்த கட்டணமும் மாற்றி அமைக்கப்படவில்லை. தற்போது விமான நிலையத்தை நவீனமய மாக்குதல், ஓடுபாதை சீரமைப்பு, வளர்ச்சி பணிகள், புதிய கட்டிடங்கள் கட்டுதல், சரக்கு முனையத்தை மேம்படுத்துதல் என ரூ.5,200 கோடிக்கு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள வேண்டி உள்ளது.

அதனால் இந்த கட்டண உயர்வை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்த கட்டண உயர்வு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

மேலும் செய்திகள்