சிறையில் இருக்கும் சந்திரபாபு நாயுடுவின் உடல்நிலை குறித்து குடும்பத்தினர் கவலை
|சிறையில் இருக்கும் சந்திரபாபு நாயுடுவின் உடல்நிலை குறித்து அவரது குடும்பத்தினர் கவலை தெரிவித்துள்ளனர்.
விஜயவாடா,
தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் சந்திரபாபுநாயுடுவின் மனைவி புவனேஸ்வரி தனது கணவரின் உடல்நிலை குறித்து கவலை தெரிவித்து உள்ளார்.
புவனேஸ்வரி தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு உள்ள பதிவில், எனது கணவரின் நலனில் நான் ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளேன், அவர் சிறையில் இருக்கும்போது அவருக்கு தேவையான மருத்துவ உதவியை ஆந்திர அரசு வழங்க தவறிவிட்டது.
அவர் ஏற்கனவே 5 கிலோ எடை குறைந்துவிட்டார், மேலும் உடல் எடை குறைந்தால் அவரது சிறுநீரகங்கள் கடுமையாக பாதிக்கப்படலாம். சிறைச்சாலையின் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் சுகாதாரமற்றவையாக உள்ளன. இந்த மோசமான சூழ்நிலைகள் எனது கணவரின் உயிருக்கு ஆபத்தை உருவாக்குகின்றன என கூறி உள்ளார்.
சந்திரபாபு நாயுடுவின் மகனும் முன்னாள் அமைச்சருமான லோகேஷ் கூறும் போது எனது தந்தையின் உயிருக்கு ஆபத்து உள்ளது. அவருக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், ஜெகன் மோகன் ரெட்டிதான் பொறுப்பு ஏற்கவேண்டும் என எச்சரித்து உள்ளார்.