குடும்ப வறுமை... பெற்ற மகளுக்கு கணவரே பாலியல் தொல்லை... தாய் எடுத்த கொடூர முடிவு
|குடும்பத்தின் வறுமையின் காரணமாக தாய் மனதளவில் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
பெங்களூரு,
கர்நாடகா மாநிலம் பெங்களூரு ஜாலஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட போவி காலனி பகுதியில் வசித்து வந்தவர் 30 வயது பெண். இவருக்கு 9 வயதில் ஒரு மகனும், 7 வயதில் ஒரு மகளும் இருந்தனர். இவர்களது சொந்த ஊர் ஆந்திர மாநிலம் ஆகும். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அந்த பெண்ணுக்கு திருமணம் நடந்தது.
தற்போது அந்த பெண்ணின் கணவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதாவது கடந்த ஆண்டு(2023) அந்த பெண்ணின் கணவர், மகளுக்கே பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி அந்த பெண், ஜாலஹள்ளி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் ஜாலஹள்ளி போலீசார் 'போக்சோ' பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து அந்த பெண்ணின் கணவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் வீட்டில் இருந்த தாய் தனது மகன் மற்றும் மகளை மூச்சை திணறடித்து படுகொலை செய்தார். பின்னர் தனது 2 பிள்ளைகளையும் கொலை செய்து விட்டதாகவும், தானும் தற்கொலை செய்யப் போவதாகவும் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது அங்கு அந்த பெண்ணின் 2 பிள்ளைகளும் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. அதையடுத்து அந்த பெண்ணை போலீசார் மடக்கி பிடித்தனர். தனது மகன் மற்றும் மகளின் முகத்தை தலையணையால் அமுக்கி அந்த பெண் கொடூரமாக கொலை செய்திருப்பது போலீசாரின் விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் அந்த பெண்ணை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் மேலும் சில தகவல்கள் வெளியானது.
அதாவது சிறிய தனியார் நிறுவனம் ஒன்றில் விற்பனை பிரதிநிதியாக அந்த பெண் வேலை செய்து வந்துள்ளார். அதில், அவருக்கு போதிய வருமானம் கிடைக்கவில்லை. கணவர் சிறைக்கு சென்றதால் குடும்பமும் வறுமையில் வாடியது. அதனால் அந்த பெண் பிள்ளைகளை வளர்க்க சிரமப்பட்டுள்ளார். இதன் காரணமாகவும், பெற்ற மகளுக்கு கணவரே பாலியல் தொல்லை கொடுத்ததாலும் மனதளவில் அந்த பெண் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த பெண் தனது 2 பிள்ளைகளையும் கொலை செய்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக தாய் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப வறுமையால் பெற்ற பிள்ளைகளை தாய் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.