குடும்ப தகராறு: பெற்றோருடன் இளம்பெண் கொடூர கொலை - காதல் கணவர் வெறிச்செயல்
|பெற்றோருடன் இளம்பெண்ணை கொடூரமாக கொன்ற, அவரது காதல் கணவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டம் முனகல் கிராமத்தை சேர்ந்தவர் நவீன் (வயது 28). இவரது மனைவி அன்னபூரணி (25). இவரது தந்தை பசவராஜப்பா (52). தாய் கவிதா (45). அன்னபூரணியின் சொந்த ஊர் தாவணகெரே மாவட்டம் ஆகும். நவீனும், அன்னபூரணியும் காதலித்து கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் அடிக்கடி நவீன், அன்னபூரணியை அடித்து உதைத்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இதனால் தனது குழந்தையுடன் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு அன்னபூரணி பெற்றோரின் வீட்டிற்கு சென்றுவிட்டார். கடந்த சில மாதங்களாக மனைவியை சமாதானப்படுத்தி அழைத்துவர நவீன் முயற்சி மேற்கொண்டு வந்துள்ளார்.
அதன்பலனாக நேற்று முன்தினம் அன்னபூரணியை அவரது தாய்- தந்தை ஆகியோர் அழைத்துக் கொண்டு நவீனின் வீட்டுக்கு வந்துள்ளனர். பின்னர் அவர்களை பஸ் ஏற்றிவிட நவீன் தனது காரில் அழைத்துக் கொண்டு சென்றுள்ளார். அவர்களுடன் அன்னபூரணியும் சென்றுள்ளார்.
வழியிலேயே நவீன், மாமனார்-மாமியாருடன் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. தனது பெற்றோருக்கு ஆதரவாக அன்னபூரணி பேசியுள்ளார். இதனால் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற நவீன் தனது காரில் வைத்திருந்த இரும்பு கம்பியால் மனைவி, மாமனார், மாமியாரை கொடூரமாக தாக்கி, கத்தியால் 3 பேரையும் சரமாரியாக குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளார். பின்னர் 3 பேரின் உடல்களையும் சைதாப்பூர் அருகே ஜோலட்டா கிராமத்தின் அருகே காட்டுப்பகுதியில் தனித்தனியாக வீசியுள்ளார். அதைத்தொடர்ந்து அவர் தலைமறைவாகிவிட்டார்.
நேற்று காலை இந்த சம்பவம் பற்றி அறிந்து அங்கு வந்த சைதாப்பூர் போலீசார், அன்னபூரணி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மாமியார் கவிதா, மாமனார் பசவராஜப்பா ஆகியோரின் உடல்களை தேடி வருகிறார்கள். அத்துடன் தலைமறைவான நவீனை கைது செய்யவும் போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.