சக மாணவியுடன் பழகிய கல்லூரி மாணவர் மீது தாக்குதல்; 9 பேர் கைது
|சக மாணவியுடன் பழகிய கல்லூரி மாணவர் மீது தாக்கிய 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
மங்களூரு;
தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா தாலுகா கசபா கிராமம் கொடியல்பயலு பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வருபவர் பல்லவி. இவர் தன்னுடன் அதே கல்லூரியில் படிக்கும் முகமது சனீப் என்பவருடன் நட்பாக பழகி வந்தார். இவா்கள் இருவரும் பழகுவதை அந்த கல்லூரியின் மற்ற மாணவர்கள் சிலருக்கு பிடிக்கவில்லை என தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவர்கள் தனது நண்பர்களான வேறொரு கல்லூரியை சேர்ந்த மாணவர்களுடன் சேர்ந்து முகமது சனீப்பை தனியாக வரவழைத்து சரமாாியாக தாக்கியுள்ளனர். மேலும் இனிமேல் பல்லவியுடன் பேசினால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் சனீப் பலத்த காயம் அடைந்தார்.
இதுகுறித்து சனீப், சுள்ளியா போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சனீப்பை தாக்கியதாக தீட்சித், தனுஷ், தனுஜ், அக்சய், மோட்சித் மற்றும் வேறொரு கல்லூரியை சேர்ந்த கவுதம் உள்பட 9 பேரை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.