< Back
தேசிய செய்திகள்
விலை வீழ்ச்சி எதிரொலி: தக்காளிகளை சாலையோரம் வீசி செல்லும் விவசாயிகள்
தேசிய செய்திகள்

விலை வீழ்ச்சி எதிரொலி: தக்காளிகளை சாலையோரம் வீசி செல்லும் விவசாயிகள்

தினத்தந்தி
|
28 Aug 2023 2:56 AM IST

விலை வீழ்ச்சி அடைந்ததால் தக்காளிகளை விவசாயிகள் சாலையோரம் வீசி செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

மைசூரு:

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை சரியாக பெய்யவில்லை. இதனால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டது. இதன்காரணமாக மார்க்கெட்டுகளுக்கு தக்காளி வரத்தும் குறைந்து போனது. இதனால், தக்காளியின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. வரலாறு காணாத வகையில் ஒரு கிலோ தக்காளி ரூ.250 வரை விற்பனையானது. இதனால் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அதே நேரத்தில் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

சுமார் 2 மாதங்களாக தக்காளி விலை ரூ.100-க்கு குறையாமல் இருந்து வந்தது. இதனால் தக்காளி வியாபாரிகள் நல்ல லாபம் சம்பாதித்து வந்தனர். தக்காளி விற்று பல விவசாயிகள் லட்சாதிபதியாகினர். மேலும் தக்காளி திருட்டும் தொடர்ந்து நடந்து வந்தது. இதனால் கடந்த 2 மாதங்களாக எங்கு பார்த்தாலும் தக்காளியை பற்றிய பேச்சாகவே இருந்து வந்தது.

தக்காளி விலை அதிகரித்ததால் ஏராளமான விவசாயிகள் தக்காளியை பயிரிட தொடங்கினார்கள். இதனால் தக்காளி வரத்து அதிகரிக்க தொடங்கியது. இதன்காரணமாக தக்காளி விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. ஒரு கிலோ தக்காளி ரூ.10-க்கும் குறைவாக விற்பனை செய்யப்படுகிறது. விவசாயிகளிடம் இருந்து ஒரு கிலோ தக்காளி ரூ.1 முதல் ரூ.5 வரை வாங்கப்படுவதாக சொல்லப்படுகிறது.

இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மார்க்கெட்டுக்களுக்கு தக்காளி குவிந்த வண்ணம் உள்ளது.

இந்த நிலையில் நேற்று மைசூரு ஏ.பி.எம்.சி. மார்க்கெட்டுக்கு தக்காளியை கொண்டு வந்த விவசாயிகள், போதிய விலை கிடைக்காததால் அதனை மார்க்கெட்டில் சாலையோரம் வீசி சென்றனர். மேலும் பல லட்சம் ரூபாய் செலவு செய்து தக்காளி பயிரிட்டும், சரியான விலை கிடைக்கவில்லையே என புலம்பி சென்றனர்.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தங்கத்துக்கு இணையாக பார்க்கப்பட்ட தக்காளி, தற்போது சாலையில் வீசப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்