< Back
தேசிய செய்திகள்
காலில் கூட விழத்தயார்: போராட்டத்தை கைவிடுங்கள் - மம்தா பானர்ஜி கோரிக்கை
தேசிய செய்திகள்

காலில் கூட விழத்தயார்: போராட்டத்தை கைவிடுங்கள் - மம்தா பானர்ஜி கோரிக்கை

தினத்தந்தி
|
15 Aug 2024 9:41 PM IST

இந்த சம்பவத்தில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொல்கத்தா,

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் கடந்த வாரம் பயிற்சி பெண் டாக்டர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக நாடு முழுவதும் டாக்டர்கள் கண்டன போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதற்கிடையே இந்த வழக்கு விசாரணையை கொல்கத்தா போலீசாரிடம் இருந்து மத்திய புலனாய்வு பிரிவுக்கு (சி பி ஐ) மாற்றி கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இந்நிலையில் நேற்று சிபிஐ, ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் தனது முதற்கட்ட விசாரணையை தொடங்கி உள்ளது. ஆனாலும் மருத்துவர்களும், மாணவர்களும் போராட்டத்தை கைவிடவில்லை. போராட்டம் காரணமாக மேற்கு வங்காளத்தில் மருத்துவ சேவை கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. போராட்டம் தொடங்கிய 5 நாட்களில் நோயாளிகளில் 3 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் சுதந்திர தின உரையில் மம்தா பானர்ஜி கூறியதாவது:-

வழக்கு தற்போது சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. கொல்கத்தா ஐகோர்ட்டின் வழக்காட்டுதலின்படி, வழக்கு விசாரணைக்கு நான் ஒத்துழைப்பேன். ஆனால் மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும். போராட்டம் தொடங்கி 5 நாட்கள் ஆகிறது. இதுவரை ஒரு சிறுவன், கர்ப்பிணிப்பெண் உள்பட 3 பேர் மருத்துவமனைகளில் உயிரிழந்துள்ளனர். உங்கள் கால்களில் கூட விழ நான் தயாராக இருக்கிறேன். போராட்டத்தை தயவு செய்து கைவிடுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.

மேலும் செய்திகள்